×

தடாகத்தில் மிளிரும் நீச்சல் தாரகை!

நன்றி குங்குமம் தோழி

குளிர் காற்று வீசிக் கொண்டு இருக்கும் ஓர் அதிகாலைப் பொழுது... சென்னை, ஷெனாய் நகர் பகுதியில் உள்ள நீச்சல் வளாகத்தில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பயிற்சியாளர் கட்டளைக்கு ஏற்றவாறு நீச்சல் பயிற்சியினை மேற்கொண்டு இருந்தனர். எல்லோர் முகத்திலும் ஒருவிதமான பரபரப்பு கீற்று இழையோடிக் கொண்டு இருந்தது. ஆனால், விதிவிலக்காக, ஒரு மாணவியிடம் மட்டும் பதற்றத்துக்கு மாற்றாக உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டு இருந்தது. அவர்  தேசிய நீச்சல் வீராங்கனை தமிழ் முல்லை. பதக்கங்களைக் குவிக்க தான் போட்ட எதிர் நீச்சல் குறித்து விவரிக்கிறார் அந்த நம்பிக்கை நட்சத்திரம்...

‘‘சின்ன வயதில் குண்டாக இருந்தேன். தொப்பை வேறு இருந்தது. அம்மாவும் அப்பாவும் என் உடல் இளைக்க டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போனாங்க. என்னை பரிசோதனை செய்த டாக்டர் ‘‘கண்டிப்பாக, அறுவை சிகிச்சை செய்யணும், அப்பதான் உங்க பெண் குணம் அடைவாள்’’ன்னு சொல்லிட்டார். அப்பாக்கு இதில் உடன்பாடு இல்லை.

உடல் இளைக்க அறுவைசிகிச்சை செய்து என்னுடைய ஒரிஜினாலிட்டியை மாற்ற  அவருக்கு விருப்பம் இல்லை. அப்பாக்கு நீச்சல் தெரியும். அறுவை சிகிச்சைக்கு பதில் தொடர்ந்து நீச்சல் பயிற்சி எடுத்தால் உடல் எடையை குறைக்க முடியும் என்று அப்பா நம்பினார். அதனால் அவரே எனக்கு பயிற்சி அளிக்க ஆரம்பிச்சார். அம்மாக்கும் ஓரளவு நிம்மதி பெருமூச்சு ஏற்பட்டது. என் உடல்நிலையில் மாற்றம் ஏற்படும் என்று நம்பினார்.

இரண்டரை வயதில் இருந்தே நீச்சல் பழக ஆரம்பித்தேன். அப்ப நாங்க திருவண்ணாமலையில் இருந்தோம். அப்பாவின் வேலை் காரணமாக சென்னைக்கு மாற்றலாகி வந்தோம். இங்கு சென்னையில் ராணி முரளிதரன் என்பவரிடம் பயிற்சியைத் தொடர்ந்தேன். அவரிடம் பயிற்சி பெற்று வந்தவர்கள், பயிற்சி மட்டும் இல்லாமல் நீச்சல் போட்டியிலும் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றனர். அவர்களை பார்த்ததும் எனக்கும் போட்டியில் பங்கு பெற வேண்டும்... பதக்கங்களை அள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அப்ப நான் ஐந்தாம் வகுப்பு தான் படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது நடைபெற்ற மாவட்ட அளவிலான மற்றும் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள ஆரம்பிச்சேன்.

முதலில், Back Stroke பிரிவில் தான் கலந்து கொண்டேன். பின்னர் Breast Strokeக்கில், 50 மீ, 100 மீ மற்றும் 200 மீ போட்டிகளில் பங்கேற்க தொடங்கினேன். ஆறாவது படிக்கும் போது மதுரையில் நடந்த ஸ்டேட் மீட் தான் நான் கலந்து கொண்ட முதல் மாநிலப் போட்டி. 24 பேர் கலந்து கொண்ட போட்டியில் 50 மீட்டர் ப்ரெஸ்ட், ஸ்ட்ரோக் பிரிவில் 44 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கம் வென்றேன். அப்போது தான் புரிந்தது Breast Stroke தான் என்னுடைய பலம் என்றும் எனக்கான ஏற்ற பிரிவு என முடிவு செய்து அதில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது பெங்களூரில் 9 மாதங்கள் வரை தங்கியிருந்து தமிழ்வாணன் என்பவரிடம் சிறப்பு பயிற்சி பெற்றேன். இவர் தந்த பயிற்சிகள் மற்றும் ஊக்கம் காரணமாகத்தான் தேசிய நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள முடிந்தது. தற்போது ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் தமிழ்நாடு அங்கீகாரம் பெற்ற ராஜேஷ்கண்ணன் என்பவரிடம் பயிற்சி பெற்று வருகிறேன்.

சென்னை, ஷெனாய் நகரில் உள்ள நீச்சல் குளத்தில் தினமும் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரையென மூன்று மணி நேரம் இடைவிடாமல் பயிற்சியில் ஈடுபடுகிறேன். முதலில், வார்ம்-அப், ஸ்டெச்சிங் எக்ஸசைர்ஸ் என 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை செய்வேன். அதன் பின்னர் 8.30 மணி வரை நீச்சல் பயிற்சி தான்.

இவைத் தவிர வாரத்தில் ஒருநாள் வெயிட் டிரெயினிங், பீச் ரேஸ், ஹில் ரேஸ், ரோடு ரேஸ் போன்ற பயிற்சிகளும் எடுத்துக் கொள்கிறேன். வெயிட் டிரெயினிங்கின் போது, பென்ச் பிரஸ், கைகளை வலுவாக்க தம்புனஸ் ஸ்க்வாட் போன்ற பயிற்சிகளை ஜிம்மில் செய்வோம். கடற்கரை மற்றும் மலைப்பகுதியில் ஒன்றரை மணி நேரம் ஓட்டப்பயிற்சி செய்வோம். போட்டிகள் நெருங்கும் சமயங்களில் ஜிம் பயிற்சியை குறைத்துக் கொள்வோம்.

அதற்குப் பதிலாக, ஸ்டெச்சிங் எக்ஸசைர்ஸ் ஃபாஸ்ட் ஒர்க்கவுட் போன்றவற்றை அதிக நேரம் செய்வோம். இதனுடன் 50 மீ, 100 மீ மற்றும் 200 மீ தூரத்தை எவ்வளவு நேரத்தில் கடக்கிறோம் என்பதை கோச் கண்காணிப்பார்’’ என்றவர் தான் பங்கு பெற்ற போட்டிகள் பற்றி விவரித்தார்.

‘‘எட்டாம் வகுப்பு படிக்கும் போது வேளச்சேரி நீச்சல் குளத்தில் நடைபெற்ற குருப்-2 லோயர் என்ட் பிரிவில் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் 200 மீட்டர் பந்தயத்தில் சீனியர்களுடன் போட்டியிட்டு 3 நிமிடம் 4 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தேன். அடுத்த வருடம் குருப்- 2 ஹையர் எண்ட் பிரிவில், 50 மீ, 100 மீ, 200 மீ ஆகியவற்றில் 3 தங்கம் வென்றேன்.

பிறகு ஆறு வருடம் தமிழக அணிக்காக நேஷனல்ஸ் போட்டிகளிலும், ஸ்கூல் கேம்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா நடத்திய போட்டிகளில் தேசிய அளவில் இதுவரை 14 போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்றுள்ளேன். இந்தாண்டு பிப்ரவரி மாதம் வேலூர் ஐ.ஐ.டி கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் 2 தங்கமும், 100 மீட்டர் Back Stroke பிரிவில் வெள்ளியும் வென்றதைச் சமீபத்திய சாதனையாகச் சொல்லலாம். இது தவிர எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் நடந்த மாநில அளவிலானப் போட்டியில் 50 ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தங்கமும், 50 மீ Back stroke-ல் வெள்ளியும் வென்றேன்’’ என்றவர் இதுவரை மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் மட்டுமே 2,000 பதக்கங்களை வென்றுள்ளார்.

‘‘போட்டிகளில் பங்கேற்க உடலளவில் தயாராவதோடு மனதளவில் உறுதியாகவும் இருப்பதும் முக்கியம். எனவே தினமும் காலையில் யோகாசனமும் இரவில் 10 நிமிடம் ஆல்ஃபா தியானமும் செய்து வருகிறேன். தற்காப்பு கலையான டேக்வாண்டோவில் ரெட் பெல்ட் பெற்றிருக்கிறேன். பரத நாட்டியமும் தெரியும். தற்போது கர்நாடக சங்கீதமும் கற்று வருகிறேன்.

ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் இதுவரை நான் எதற்காகவும் பாதிக்கப்பட்டது இல்லை. பயிற்சியாளர், சக வீரர்கள் என அனைவரும் என்னிடம் கண்ணியமாகவும் நாகரிகத்துடனும் நடந்து கொள்கின்றனர். அமெரிக்காவின் பிரபல நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தான் என்னுடைய ரோல் மாடல். எங்கள் கல்லூரி முதல்வர், துறைத்தலைவர் மற்றும் உடற் பயிற்சி இயக்குனர் ராஜகுமாரி ஆகியோர் தரும் ஒத்துழைப்பு உற்சாகத்தால் தான் இவ்வளவு சாதிக்க முடிகிறது. என்னுடைய இலக்கு ஒலிம்பிக் போட்டிகளில் நம் நாடு சார்பாக பங்குபெற்று தங்கப் பதக்கம் பெறவேண்டும்’’ என்றார் தமிழ் முல்லை.

பாலுவிஜயன்

Tags : Swimming ,pad swimming ,
× RELATED தேசிய பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டி வீரர், வீராங்கனைகள் 3 பேர் சாதனை