×

மத்திய பிரதேச காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கமல்நாத் ஆட்சியை கவிழ்த்ததற்கு முதலாமாண்டு ‘பார்ட்டி’ : ஆதரவு கோஷ்டிகளுடன் சிந்தியா உற்சாகம்

போபால் : மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் ஆட்சி கவிழ்ந்து ஓராண்டு முடிவதால், நேற்று முன்தினம்  தனது ஆதரவு கோஷ்டிகளுக்கு ஜோதிராதித்ய சிந்தியா பார்ட்டி வைத்து உற்சாகப்படுத்தினார். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் வி.டி.ஷர்மா ஆகியோர் அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு 2020 மார்ச் 20ம் ேததியன்று விருந்து கொடுத்தனர். அதன்பின், முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அதன்பின் நடந்த இடைத்தேர்தலில் அதிக இடங்களை பாஜக கைப்பற்றியதால், முதல்வராக சிவராஜ் சிங் சவுகானின் ஆட்சி தொடர்கிறது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து தற்போது எம்பியாக உள்ள ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் சிலர் தற்போது சவுகானின் அமைச்சரவையில் உள்ளனர். இந்நிலையில், கமல்நாத்தின் ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சியமைக்க வழிவகை செய்து கொடுத்த ஜோதிராதித்ய சிந்தியா, தனது விசுவாசிகளான துளசிராம் சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத், பிரதுமன் சிங் தோமர், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு நேற்று (கமல்நாத் ஆட்சியை இழந்த ஓராண்டு நிறைவுபெற்ற நாள் மார்ச் 20) போபாலில் விருந்து கொடுத்தார். இந்த விருந்தில் முதல்வர் சவுகானும் கலந்து கொண்டார். பின்னர், சிந்தியா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘மாநிலத்தை ஆண்ட கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியான மாபியாக்களின் பிடியில் இருந்து தூக்கி எறியப்பட்டது. சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் ஆட்சி அமைந்தது. கடந்த ஒரு வருடத்தில், கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் சிறப்பான நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது’ என்றார்.

முன்னதாக நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள முன்னாள் முதல்வர் கமல்நாத் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘கடந்தாண்டு எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியால் ஆட்சி பறிபோனது. அவர்களின் சூழ்ச்சி எனக்குத் தெரியும். அதனால், நான் மார்ச் 20, 2020 அன்று எனது பதவியை ராஜினாமா செய்தேன். ஜனநாயகத்தை நிலைநாட்ட அவ்வாறு செய்தேன்’ என்றார். ஓராண்டுக்கு பின் சிந்தியா பார்ட்டி வைத்து கொண்டாடியது குறித்து பாஜகவின் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘கமல்நாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதற்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யவில்லை. பாஜக ஆட்சி அமைந்து ஒரு ஆண்டு முடிந்ததால் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது’ என்றனர்.


Tags : -Divisional ,Congress ,Principal Kamalnath ,Cynthia , Kamal Nath rule, Cynthia
× RELATED மரணத்திலும் எடப்பாடி பழனிசாமி...