8 வழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகள் எடப்பாடி வருகை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: செங்கம், செய்யாறில் நடந்தது

செங்கம்: சென்னை- சேலம் வரை அமையும் 8 வழிச்சாலை திட்டத்தால் திருவண்ணாமலை உட்பட 5 மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மேலும், இத்திட்டத்தை ஆதரிக்கும் அதிமுக அரசுக்கும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கண்டனம் தெரிவித்தும், 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரியும் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அதன்படி, செங்கம் சட்டமன்ற தொகுதியில்  போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.நைனாக்கண்ணுவை ஆதரித்து, பிரசாரம் செய்ய முதல்வர் நேற்று மாலை செங்கம் நகருக்கு வந்தார்.

அப்போது, முதல்வர் வரும் வழியான, புதுச்சேரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மண்மலை கிராமத்தில் சாலையின் இருபுறமும் திரண்ட விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், முதல்வரின் பாதுகாப்புக்காக வந்த போலீசாரின் வாகனங்கள், மண்மலை கிராமத்தை நெருங்கியதும், அங்கிருந்த விவசாயிகள் கலைந்து சென்றுவிட்டனர். இதேபோல், செய்யாறு அடுத்த எருமைவெட்டி கிராமத்திலும் தமிழக முதல்வரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள விளைநிலத்தில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: