×

கோயில் நந்தவனத்தை ஆக்கிரமித்து சாலை அமைச்சர் கருப்பணனை வழிமறித்து பக்தர்கள் வாக்குவாதம்: பிரசாரம் செய்ய முடியாமல் திரும்பினார்

பவானி: அம்மாபேட்டை சொக்கநாதர் கோயில் நந்தவனத்தை ஆக்கிரமித்து சாலை போடப்பட்டதை கண்டித்து பிரசாரத்துக்கு வந்த அமைச்சர் கே.சி.கருப்பணனை பக்தர்கள் வழிமறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அவர் பிரசாரம் செய்ய முடியாமல் அங்கிருந்து நழுவிச் சென்றார். ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை காவிரி கரையோரத்தில் மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலுக்கு வலதுபுறத்தில் நந்தவனம் இருந்தது.

இந்த நந்தவனத்தை ஆக்கிரமித்து 30 அடி நீளம், 60 அகலத்தில் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஜனவரி 14ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு சாலையை அகற்றி நந்தவனமாக ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அம்மாபேட்டை பேரூராட்சி நிர்வாகம் முறையாக இப்பணியை மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சுற்றுச்சூழல்துறை அமைச்சரும், பவானி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருமான கே.சி.கருப்பணன் நேற்று சொக்கநாதர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கினார். அப்போது, பக்தர்கள் அவரை வழிமறித்து நந்தவன நிலம் தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பினர். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்பு சாலை அகற்றப்படாததற்கு உங்கள் (அமைச்சர்) தலையீடுதான் காரணம் என்று குற்றம் சாற்றினர். இதற்கு பதில் எதுவும் ெசால்ல முடியாமல் அமைச்சர் திணறினார். தொடர்ந்து அப்பகுதியில் பிரசாரம் செய்யாமல் அவர் அங்கிருந்து ஆதரவாளர்களுடன் நழுவிச் ெசன்றார்.


அதிமுக வேட்பாளரை பொதுமக்கள் முற்றுகை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக சார்பில், லோகிராஜன் போட்டியிடுகிறார். இவர், ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜகோபாலன்பட்டியில் நேற்று வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது, அவரை சூழ்ந்த கிராம மக்கள், இப்பகுதி அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் கண்ணன் என்பவர், ஒரு தரப்பு மக்களுக்கு எதிராக செயல்பட்டு, தங்களை புறக்கணிப்பதாக புகார் தெரிவித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதை சற்றும் எதிர்பார்க்காத அதிமுக வேட்பாளர் லோகிராஜன், இதுகுறித்து விசாரிக்கிறேன் என்றார்.



Tags : Temple Nandavana ,Road Minister , Temple Nandavana, Minister Karuppanana, returned unable to campaign
× RELATED மெஞ்ஞானபுரத்தில் பேவர்பிளாக் சாலை...