×

தனியாரிடமிருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கியதால் தமிழக மின்வாரியம் ரூ.1,60,000 கோடி கடனில் தத்தளிக்கிறது: தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு தலைவர் காந்தி

தமிழகம் முழுவதும் வீடு, தொழிற்சாலை, விவசாயம் என பல்வேறு பிரிவுகளில் 2  கோடியே 96 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. மின்வாரியமே சுயமாகவும், மத்திய  தொகுப்பில் இருந்தும் மின்சாரம் பெற்று இணைப்புகளுக்கு தேவையான மின்சாரத்தை தருகிறது. இதை தவிர, தனியாரிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல்  செய்யப்படுகிறது. இதில், தமிழக மின்வாரியத்தின் மின்உற்பத்தி நிலையங்கள் மூலம் 30% மின்சாரம் கிடைக்கிறது. மேலும், 30%  மின்சாரம் மத்திய  தொகுப்பில் இருந்து பெறப்படுகிறது. மீதம்  இருக்கும் 40% மின்சாரம் தனியாரிடம் இருந்து கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழக மின்வாரியமே, நீர் மற்றும் அனல், புனல் உற்பத்தி நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யும்போது செலவு குறைவாக இருக்கும். அதாவது, ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3 முதல் ரூ.3.50 வரை இருக்கிறது.

அதேபோல மத்திய தொகுப்பில் இருந்து விலை கொடுத்து வாங்கப்படும் மின்சாரத்தின் விலையும் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. இதுவே நுகர்வோரிடம் வரும் போது ஒரு யூனிட்டுக்கு ரூ.7 முதல்  ரூ.7.50 வரை உயர்ந்துவிடுகிறது. எனவே கொள்முதல் விலை குறைவாக இருந்தால் தான்  நஷ்டத்தை குறைக்க முடியும். மின்வாரியம் சுயஉற்பத்தியை அதிகரித்தால்  மட்டுமே விலை குறையும். தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதால் விலை  குறையாது. தனியார் லாபத்திற்கு தான் மின்சாரத்தை விற்பனை செய்கின்றனர்.  நெருக்கடி இருந்தால் மேலும் அதிக லாபத்துக்கு விற்பனை செய்கின்றனர்.

இதனால், மின்வாரியம் கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக தமிழக மின்வாரியத்துக்கு 1,60,000 கோடி கடன் ஏற்பட்டுள்ளது. எனவே சுயசார்பு இல்லாமல் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கியதே காரணம். இவ்வளவு கடன் சுமை உள்ள நிலையிலும் கூட மின்சாரம் வாங்க  வேண்டிய அவசியமில்லாத நிறுவனத்துக்கு ரூ.2,340 கோடியை மின்வாரியம் அள்ளித்தர  ஒப்புக்கொண்டிருக்கிறது. இதில், ஒரு பகுதியையும் வழங்கி விட்டது.  மின்வாரியத்தின் உயர்மட்டத்தில் நடந்துள்ள மிகப்பெரும் ஊழல் ஆகும். தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து மின்சாரம்  கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்திடம் இருந்து கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கியதே, தமிழக மின்வாரியம் கடனில் மூழ்க முக்கிய காரணமாக மாறியுள்ளது. அதாவது, சுயமாக தயாரிக்கும்போது ஒரு யூனிட்டுக்கு ரூ.3.50 ஆகிறது. ஆனால் தனியார் நிறுவனத்தில் இருந்து அதே ஒரு யூனிட் மின்சாரம் ரூ.17.78ல் இருந்து ரூ.21.80 வரையிலும் கூட வாங்கப்பட்டிருக்கிறது தெரிகிறது. அதாவது யூனிட் ரூ.11.60க்கு சராசரியாக கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த  நிலையத்தின் மின்சாரத்தை வாங்க வேண்டாம் என 2012ம் ஆண்டிலேயே ஒழுங்கு முறை  ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மின்சாரமே வாங்காத நிலையத்திற்கு பணத்தை கொட்டிக் கொடுத்துள்ள வாரியம் சந்தையில் மிகக் குறைந்த விலை மின்சாரம் தரும் ஒரு தனியார் நிறுவனத்திடம் மின்சாரத்தை வாங்க மறுத்துள்ளது. இந்த மின்சாரம். யூனிட் ரூ2.90 தான். இதன்  ஒப்பந்தம் ஜூலை 2020ல் நிறைவுபெற்றாலும், 2025 வரையில் இதற்கு எரிபொருள்  ஒப்பந்தம் உள்ளதாக அறிகிறோம். ஏன் இந்த மின்சாரத்தை வாங்கவில்லை என்பது தெரியவில்லை.

அதே போல்  இந்தாண்டு ஜூலையில் முடிவுபெரும் மற்றொரு நிலையத்தின் மின்சாரத்தின்  விலையும் யூனிட் ரூ.2.90 தான். இதனை நீடிக்கவும் எந்த முயற்சியும்  இருப்பதாகத் தெரியவில்லை. ஊறிப்போன மேல் மட்ட நிர்வாகத்தின் ஊழலால் தான்  மின்வாரியம் இன்று ரூ.1,60,000 கோடி  இழப்பில் சிக்கித் தவிக்கிறது. மேலும், இந்த முறைகேடுகளுக்கு  காரணமானவர்கள் மீது கைது செய்வது உட்பட கடும் நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்துகிறோம்.
இந்த சூழ்நிலையில், தமிழக அரசு சுயஉற்பத்தியினை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு சுய  மின்உற்பத்தியை அதிகரிப்பதற்கு புதிதாக மின்உற்பத்தி நிலையங்களை அமைக்க  வேண்டும். அதை மின்வாரியம் செய்யவில்லை. மாநில சுயஉற்பத்தி மற்றும் மத்திய  தொகுப்பில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் விலை மிகவும் குறைவாக  இருக்கிறது. தனியாரிடம் இருந்து வாங்கும் மின்சாரத்தின் விலையானது மின்வாரியத்தின் சுயஉற்பத்தி மற்றும் மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கும்  மின்சாரத்தின் விலையை விட அதிகமாக இருக்கிறது.

இதைத்தான் அதிமுக அரசு  செய்துள்ளது. அரசு மிகைமின்மாநிலம் என்று சொல்கிறார்கள். ஆனால் சுயமாக  மின்உற்பத்தியை அதிகரித்து மிகைமின்மாநிலமாக மாற்றவில்லை. மாறாக தனியாரிடம்  கூடுதல் விலை கொடுத்து வாங்கித்தான் மிகைமின்நிலையமாக மாற்றியுள்ளனர்.  இதனால் தான் வாரியத்திற்கு இவ்வளவு கோடி கடன் ஏற்பட்டுள்ளது. எனவே சுய  மின்உற்பத்தியை அதிகரிக்காமல் கடன் ஏற்படுவதை தடுக்க முடியாது. இதற்கு  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூடப்பட்ட நிறுவனத்துக்கு 2,340 கோடி?
தமிழக மின்வாரியத்துடன் ஒப்பந்தப்படி மின்சாரம்  வாங்காவிட்டாலும்,  மூலதன கட்டணம்  என்ற பெயரில் இந்நிறுவனத்துக்கு  ஆண்டுக்கு தோராயமாக ரூ.250  கோடி தரப்பட்டு வந்துள்ளது. 2016ம் ஆண்டுக்கு  பிறகு இது ஆண்டுக்கு ரூ.148  கோடியாக இருக்க கூடும். இந்த மூலதனக் கட்டணம்  பெற, நிறுவனம் மின் உற்பத்தி  செய்யும் நிலையில் இருந்தால் மட்டும்  போதுமானது. ஆனால் 2016ல் இந்நிலையத்தின் எரிபொருள் ஒப்பந்தம்  முடிந்துபோனதால்  உற்பத்தி செய்யும் நிலையில் இல்லை. அதனால் மூலதனக்  கட்டணமான ரூ.148 கோடியை  மின்வாரியம் ஒப்பந்தப்படி  தர வேண்டியதில்லை.  2016க்கு பிறகு இக்கட்டணமும்   தரப்படவும் இல்லை. ஆனால் மார்ச் 2020ல்,  மின்சாரமே வாங்காத காலமான 2016  லிருந்து  ஒப்பந்த காலமான 2031 வரையில்  இந்த மூலதனக் கட்டணத்தைத்  தர  வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது.  பணமும்  செலுத்திக் கொண்டிருக்கிறது.

நடப்பு  காலம் வரை (24/06/2021 - மார்ச்  2021 வரை) ரூ.740 கோடியும் வட்டியாக  ரூ.120 கோடியையும் வரும் காலத்தில்  ரூ.1,480 கோடியும் தரப் போகிறார்கள்.  மொத்தமாக ரூ.2340 கோடியை வாரி வழங்க  மின்வாரியம் முடிவெடுத்துள்ளது.  இந்நிலையம் இனி மின் உற்பத்தியே செய்யப்  போவதும் இல்லை. உற்பத்தி செய்தாலும் அதன் விலைக்கு கொள்முதலும்  செய்யவும் முடியாது. ஆக இது, தனியாருக்கு கொள்ளை லாபம் தரும் முடிவாகும்.   இந்த நிறுவனத்திடம் மின்சாரம் வாங்கிய காலத்தில் ’’பில்லிங்கில்’’   நடந்திருக்கும் குளறுபடியால் மின்வாரியத்திற்கு ரூ.1,300 கோடி வர   வேண்டியும் உள்ளது. ஆனால் அதை பற்றி வாரியம் எந்த முடிவையும் எடுக்கவில்லை.   தனியாருக்கு லாபமான வகையில் மட்டும் முடிவெடுத்துள்ளது.

Tags : TN Electricity Board ,Tamil Nadu Electricity Engineers Organisation ,Chairman Gandhi , Electricity at extra cost, Tamil Nadu Electricity Board, Gandhi
× RELATED மின்கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்த...