திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் கொரோனாவுக்கு ஒரே ஆண்டில் தடுப்பூசி கண்டுபிடித்தவர் மோடி: முதல்வர் எடப்பாடி பேச்சு

ஆரணி: கொரோனாவுக்கு ஒரே ஆண்டில் தடுப்பூசி கண்டுபிடித்த உலக நாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி செய்தவர் பிரதமர் மோடி என்று திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பேசினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். வந்தவாசியில் தொடங்கி, செய்யாறு, ஆரணி, போளூர், கலசபாக்கம், திருவண்ணாமலை மற்றும் செங்கம் ஆகிய இடங்களில் வேனில் இருந்தபடி பேசினார். ஆரணி சட்டமன்ற தொகுதி  அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரனை ஆதரித்து,  எடப்பாடி பேசுகையில், ‘அதிமுக அரசு நெசவாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறது. விசைத்தறிக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருவதை, உயர்த்தி 1,000 யூனிட்டாக உயர்த்தப்படும்.  கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ₹5 ஆயிரம் வழங்கப்படும்.

வங்கி கொள்முதல் கழகம் ஏற்படுத்தப்பட்டு நூல் விலை உயராமல் பாதுகாக்கப்படும். நெசவாளர்கள் நலவாரியம் அமைக்கப்படும். ஏழை நெசவாளர்களுக்கு 10 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஆரணியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும்’ என்றார். போளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசுகையில், `மாநில வளர்ச்சிக்கு கல்வி வளர்ச்சி அவசியம். இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. ஆண்டுக்கு 5 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்களை தருகிறோம். அமெரிக்காவில்கூட பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் தருவதில்லை. குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களை தூர்வாரியுள்ளோம். இதனால் மழைநீர் நிரம்பி குடிநீர் பஞ்சம் இல்லாத மாநிலமாக உருவாகியுள்ளது’ என்றார்.

மேலும், வந்தவாசியில் வேட்பாளர் முரளி சங்கருக்கு வாக்கு சேகரித்தபோது முதல்வர் பேசுகையில், அதிமுக அரசு விவசாயிகளுக்கு பக்கபலமாக உள்ளது.  தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. சாதி சண்டைகள், கலவரங்கள் இல்லை.

சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. திருவண்ணாமலை காந்தி சிலை சந்திப்பு அருகே, திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.தணிகைவேல், கீழ்பென்னாத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் செல்வகுமார் ஆகியோரை ஆதரித்து முதல்வர் பேசுகையில், `கொரோனா தடுப்பூசியை ஒரே ஆண்டில் கண்டுபிடித்து, உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலையை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி. அதிமுக தலைமையிலான கூட்டணி மக்கள் எண்ணங்களை நிறைவேற்றுகிற கூட்டணி’ என்றார்.

Related Stories:

>