×

கர்நாடகாவில் கொரோனா 2வது அலை அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்க முடிவு: அமைச்சர் சுதாகர் தகவல்

பெங்களூரு: ‘கர்நாடகாவில் கொரோனா 2வது அலை தொடங்கியுள்ளதால், இது பற்றி அனைத்துக் கட்சி கூட்டத்தை  கூட்டி அரசு ஆலோசனை நடத்தும்,’ என்று இம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்தார். இது பற்றி நேற்று அவர் அளித்த பேட்டி: கொரோனா தொற்றுக்கு பெங்களூருவில் ஆயிரத்துக்கு அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். மாநிலம் முழுவதும் நேற்று முன் தினம் ஒரே நாளில் 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.  எனவே கொரோனா குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகிறது. விதிமுறைகளை மீறும்போது தொற்று அதிகரிக்ககூடும்.  மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வது மற்றும், சமூக இடைவெளி, சானிடைசர் ஆகியவற்றை பயன்படுத்துவதை விட்டுவிடக் கூடாது..கொரோனாவின் இரண்டாவது அலையை தடுக்க அடுத்த 3 மாதத்துக்கு இளைஞர்களின் சில நடவடிக்கைகளை கடிவாளமிட்டு ஒடுக்கவேண்டியுள்ளது. விதிமுறையை மீறி மதுபான விருந்து, இரவு நேரங்களில் அதிகளவு ஊர் சுற்றுவதை தவிர்க்கவேண்டும். மேலும் பொது நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகள், வழிபாட்டு தலங்களில் தேவையில்லாமல்  மக்கள் கூடுவதை தவிர்க்கவேண்டும்.

கொரோனா தடுப்பு மருந்துகள், முறையாக வழங்கப்பட்டு வருகிறது. முதியவர்களை தொடர்ந்து சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. பள்ளி கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு பின்னர் விடுமுறை வழங்கப்பட்டு விடும். அதற்குள் மாணவர்களுக்கு தொற்று அதிகரித்தால், பள்ளி, கல்லூரிகள் மூடப்படுவது குறித்து அறிவிக்கப்படும். முன்னதாக இது குறித்து இன்று முதல்வர் எடியூரப்பா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். மக்களவை, பேரவை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கட்சிகள் மும்முரமாக உள்ளதால், கொரோனா தொற்று குறித்து அனைத்து கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் இறுதி முடிவு தெரிவிக்கப்படும்.

வெளி மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளின் கொரோனா அறிக்கைகளை ஆய்வு செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதிலும் நெகடிவ் காணப்பட்டால் மட்டுமே அனுமதியுண்டு.  அதே நேரம் ஊரடங்கு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. அவ்வாறு ஊரடங்கு அமல்படுத்துவதாக இருந்தால் முதலில் இரவு ஊரடங்கு தான் அமல்படுத்தப்படும். அதன் பின்னர்தான் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் இது குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பின்னர்தான் அடுத்த கட்ட முடிவு எடுக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.



Tags : Corona ,Karnataka ,Minister ,Sudhakar , Karnataka, Corona, 2nd Wave, Minister Sudhakar
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு