அவுரங்காபாத் சரணாலயத்தில் 81 ஆண்டுகளுக்கு பிறகு வந்த புலி: இரை தேடி 2,000 கிமீ பயணம்

அவுரங்காபாத்: அவுரங்காபாத்தில் உள்ள கவுதாலா சரணாலயத்தில் 81 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக புலி ஒன்று தென்பட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள கவுதாலா ஆத்ரம்கட் சரணாலயம், கடைசியாக இங்கு 1940 ஆண்டுதான் புலி தென்பட்டுள்ளது. அதன் பிறகு வனத்துறை வைத்துள்ள எந்த கேமராவிலும் புலிகள் நடமாட்டம் பதிவாகவில்லை. இந்நிலையில், 81 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக தற்போது ஆண் புலி ஒன்று வனத்துறை கேமராவில் தென்பட்டுள்ளது. இது குறித்து வன அதிகாரி விஜய் சத்புதே கூறுகையில், ‘‘இந்த புலி யவத்மலில் உள்ள திபேஷ்வர் சரணாலயத்தில் இருந்து 330 கிமீ கடந்து இங்கு வந்திருக்கலாம். இது நன்கு வளர்ந்த ஆண் புலியாகும். சரணாலயத்திற்கு மார்ச் 11-12ம் தேதியில் வந்துள்ளது. இது மார்ச் 15ம் தேதி வனத்துறை கேமராவில் பதிவாகி உள்ளது,’’ என்றார்.

இந்த புலி தனது இரையை தேடி வந்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர். ஏற்கனவே ஒரு காட்டுப் பன்றியை புலி வேட்டையாடி உள்ளது. மகாராஷ்ரடிரா மாநில வனவிலங்கு வாரிய உறுப்பினர் யாதவ் படேல் கூறுகையில், ‘‘இப்புலி தெலங்கானா, அஜந்தா மலைத் தொடர்களைக் கடந்து சுமார் 2000 கிமீ பயணம் செய்து இங்கு வந்திருக்க வாய்ப்புண்டு. புலியின் வழித்தடங்கள் அவற்றின் வாழ்விடமாக அறிவிக்கப்பட வேண்டும். அவற்றின் வழித்தடங்களை பாதுகாக்க சிறந்த வனவிலங்கு மேலாண்மை நடைமுறைகள் செயல்படுத்தப்பட வேண்டும்’’ என்றார்.

தாயத்துக்காக புலி மீசை ‘கட்’

ராஜஸ்தானில் சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் எஸ்டி-6 என பெயரிடப்பட்ட புலி ஒன்றின் மீசை முடியை வன அதிகாரிகள் வெட்டி அதை தாயத்து செய்ய பயன்படுத்துவதாக பெயர் வெளியிடாத வன காப்பாளர் ஒருவர் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். புலியின் நகம், முடிக்கு தாயத்து செய்ய அதிகளவில் மவுசு உள்ளது. இதை பயன்படுத்தி உயர் அதிகாரிகள் சிகிச்சை பெறும் புலியின் மீசையை வெட்டி சட்ட விரோதமாக பயன்படுத்துவதாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>