×

உலக கோப்பை தொடர் வரை ரோகித்துடன் இணைந்து தொடக்க வீரராக விளையாடுவேன்...: கேப்டன் கோஹ்லி உற்சாகம்

அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்திய இந்திய அணி கேப்டன் கோஹ்லி, ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் வரை ரோகித்துடன் இணைந்து தொடக்க வீரராக விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதின. முதல் 4 போட்டிகளின் முடிவில் 2-2 என சமநிலை வகித்த நிலையில், 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று முன்தினம் இரவு நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச, இந்தியா 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன் குவித்தது. ரோகித் 64, சூரியகுமார் 32 ரன் எடுத்து வெளியேற, கோஹ்லி 80 ரன், ஹர்திக் 39 ரன் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன் மட்டுமே சேர்த்து 36 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பட்லர் 52, மாலன் 68 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். இந்திய பந்துவீச்சில், 4 ஓவரில் 15 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றிய புவனேஷ்வர் குமார் ஆட்ட நாயகன் விருது பெற்றார். தாகூர் 3, ஹர்திக், நடராஜன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 3-2 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இத்தொடரில் 5 இன்னிங்சில் களமிறங்கிய கோஹ்லி 231 ரன் குவித்து (அதிகம் 80*, சராசரி 115.50, அரை சதம் 3) தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த வெற்றி குறித்து கோஹ்லி கூறியதாவது: இது ஒரு முழுமையான ஆட்டமாக அமைந்தது. ரிஷப், ஷ்ரேயாஸ் பேட் செய்யாமலேயே எங்களால் 224 ரன் குவிக்க முடிந்தது, பேட்டிங் வரிசையின் வலுவை உணர்த்துவதாக உள்ளது. ரோகித்தும் நானும் இணைந்து மிகுந்த தன்னம்பிக்கையுடன் விளையாடினோம். ரோகித் அற்புதமாக விளையாடினார். அடுத்து சூரியகுமார், ஹர்திக் அமர்க்களப்படுத்திவிட்டனர்.

ஐபிஎல் தொடரிலும் தொடக்க வீரராக விளையாட உள்ளேன். பேட்டிங் வரிசையில் முன்னதாக பல இடங்களில் விளையாடி இருக்கிறேன். தற்போது நடு வரிசை மிக வலுவாக அமைந்துள்ளதாக உணர்கிறேன். எனவே, உலக கோப்பை வரை ரோகித்துடன் இணைந்து தொடக்க வீரராக விளையாட முடிவு செய்துள்ளேன். இருவரில் ஒருவர் நீண்ட நேரம் களத்தில் நின்றால் கூட எதிரணி பந்துவீச்சை சிதறடிக்க முடியும். அடுத்து வரும் வீரர்களும் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடுவார்கள். இளம் வீரர்கள் ஷ்ரேயாஸ், இஷான், சூரியகுமார், பன்ட் ஆகியோர் தங்களின் திறமையை நிரூபித்துள்ளனர். இவ்வாறு கோஹ்லி கூறியுள்ளார். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி நாளை பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. 2வது போட்டி 26ம் தேதியும், கடைசி ஒருநாள் மார்ச் 28ம் தேதியும் நடக்க உள்ளன. அனைத்து போட்டிகளும் புனே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது.

Tags : Rohit ,World Cup ,Kohli , World Cup, Rohit, will play, Kohli excited
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது