×

பங்குனி திருவிழாவையொட்டி அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் வீதியுலா: பக்தர்கள் பெருந்திரளாக பங்கேற்பு

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி, அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி திருவீதியுலா காட்சி நடைபெற்றது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்தாண்டு பங்குனி திருவிழா, கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் 2வது நாள் சூரிய வட்டம், சந்திர வட்டம், கிளி, அன்ன வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடந்தது. தொடர்ந்து 3வது நாளான நேற்று அதிகார நந்தி வாகனத்தில், கற்பகாம்பிகை உடனுறை கபாலீஸ்வரர் சர்வ அலங்காரத்தில் நான்கு மாட வீதிகளில் திருவீதியுலா வந்தார். அதிகார நந்தி வாகனத்தை பின் தொடர்ந்து, கந்தருவன், கந்தருவி, மூஷிகம், வெள்விடை வாகனங்களில் பரிவார தேவதைகள் உடன் வந்தனர். தொடர்ந்து திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழா நடந்தது. இதில், பக்தர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

மாட விதிகளில் சுவாமி திருவீதியுலா வருவதையொட்டி ராமகிருஷ்ண மடம் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. தொடர்ந்து, நேற்று இரவு 9 மணியளவில் பூதன், பூதகி, தாரகாசுர வாகனங்களில் சுவாமி திருவீதியுலா காட்சி நடந்தது. விழாவை ஒட்டி, இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இன்று காலை 9 மணி முதல் புருஷாமிருகம், சிங்கம், புலி வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவும், இரவு 9 மணியளவில் நாகம், காமதேனு, ஆடு வாகனங்களில் திருவீதியுலாவும் நடக்கிறது. இதை தொடர்ந்து நாளை காலை 8.30 மணியளவில் சவுடல் விமானமும், இரவு 10 மணியளவில் வெள்ளி விடைபெருவிழா காட்சியும் நடக்கிறது.

Tags : Kabaliswarar Veediula ,Nandi ,Panguni festival , Panguni Festival, Nandi Vehicle, Kabaliswarar Road
× RELATED மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா