நச்சுனு 4 கேள்வி; கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு இல்லை: மக்கள் நீதி மய்யம் கட்சி, விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் சினேகன்

1தொகுதி மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

தேர்தல் பணி மிகவும் துரிதமாக சென்றுகொண்டிருக்கிறது. தேர்தலுக்கு மிகக்குறைந்த நாட்களே உள்ளதால் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறோம். மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனக்கு மீடியா முகம் இருப்பதால் வரவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். இது தான் எனது முதல் வெற்றியாக இருக்கிறது.

2ரூ.10 கோடிக்கு உங்களை விலைபேசினார்களே. ஓகே சொல்லிவிட்டீர்களா?

வெற்றிபெற்ற பிறகு உங்களை விலைக்கு தானே வாங்குவார்கள் என ஒரு பத்திரிகையாளர் என்னிடம் கேள்வி கேட்டார். அதற்கு, இப்போதே என்னை விலைபேசுகிறார்கள் என்று கூறினேன். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் மூலமாக சில கட்சியினர் நான் போட்டியிடாமல் இருக்க விலை பேசினார்கள். நான் தேர்தலில் நிற்பது அவர்களின் வெற்றியை பாதிக்கும் என நினைக்கிறார்கள். வாபஸ் வாங்கினால் தேவையானவற்றை செய்வதாக கூறினார்கள். நான் விளம்பரம் தேடவில்லை. நாங்கள் எப்போதும் விலைபோக மாட்டோம் என்பதை தெளிவு படுத்தவே இதை நான் பொதுவெளியில் கூறினேன். நாகரீகம் கருதி எந்த கட்சி விலை பேசியது என்பதை வெளியிட வேண்டாம் என நினைக்கிறேன்.

3கூட்டணி கட்சியினர் பிரச்சாரங்களில் உங்களுக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கிறதா?

வெளிப்படையாக கூறவேண்டும் என்றால் பல இடங்களில் கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பு என்பது குறைவாகவே இருக்கிறது. 2 நாட்களாக என்னுடைய கூட்டணி கட்சியினரை தொடர்பு கொண்டேன்.  வருகிறேன் என்கிறார்கள்.. ஆனால் வரவில்லை. எப்போதுமே கூட்டணி கட்சியினருக்கு என்று ஒரு தர்மம் இருக்கிறது. அந்த தர்மம் எங்களுடைய கூட்டணி கட்சியினரிடம் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது. கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் அந்த கட்சி தொண்டர்களை விட எங்கள் கட்சி தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். நகர்ப்புறங்களில் ஒத்துழைப்பு மிகவும் குறைவு.

4இது குறித்து உங்கள் கட்சி தலைவர் கமலிடம் தெரிவித்தீர்களா?

நான் இதுவரையில் சொல்லவில்லை. ஆனால், இப்போது சொல்லலாம் என்று நினைக்கிறேன். நான் இதை ஒரு புகாராக சொல்லப்போவது இல்லை. ஒரு தகவலாக மட்டுமே கட்சி தலைமையிடம் தெரிவிக்க இருக்கிறேன்.

Related Stories:

>