×

சென்னை எப்போதும் திமுக கோட்டையாக இருந்து வருகிறது செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் பிடிப்போம்: அம்பத்தூர் தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை எப்போதும் திமுக கோட்டையாக இருந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் பிடிப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று செய்யூர் தொகுதி விசிக வேட்பாளர் பனையூர் பாபு, மதுராந்தகம்(தனி) தொகுதி மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா, உத்திரமேரூர் தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோரை ஆதரித்து உத்திரமேரூரிலும், அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல், வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் அ.வெற்றி அழகன், அண்ணாநகர் தொகுதி திமுக வேட்பாளர் எம்.கே.மோகன், மதுரவாயல் தொகுதி திமுக வேட்பாளர் காரம்பாக்கம் க.கணபதி ஆகியோரை ஆதரித்து அம்பத்தூரில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன், திருத்தணி தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.சந்திரன், ஆவடி தொகுதி திமுக வேட்பாளர் சா.மு.நாசர், பூந்தமல்லி(தனி) தொகுதி திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோரை ஆதரித்து திருநின்றவூரிலும் பிரசாரத்தில் ஈடுபட்டார். சென்னை அம்பத்தூரில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவர் பேசியதாவது: சென்னை என்பது திமுகவின்  கோட்டை. அந்த சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை நாம் கைப்பற்றி ஆக வேண்டும். அதற்காக தான் இந்த தேர்தல். அதற்காகத்தான் உங்களை தேடி வந்திருக்கிறேன். நாடி வந்து இருக்கிறேன். தமிழகம் அனைத்து துறைகளிலும் பாழ்ப்பட்டு போய் இருக்கிறது. எல்லா துறைகளிலும் பின்தங்கி போய் இருக்கிறது. 50 ஆண்டு காலம் பின்தங்கி போயிருக்கிறோம். ஆனால் தமிழகத்தை ஆளக்கூடிய பழனிசாமி, ஊர் ஊராக போய் என்ன பேசுகிறார் என்றால், நான் சிறப்பாக ஆட்சி நடத்துகிறேன். மக்களுக்காக தொண்டாற்றுகிறேன். எனக்கு பல விருதுகள் எல்லாம் வந்து சேர்ந்து இருக்கிறது. அப்படி பெருமையாக பேசிக்கிட்டு இருக்கிறார்.

பழனிசாமி தன்னை விவசாயி, விவசாயி என்று தம்பட்டம் அடித்து கொள்கிறார். எங்கே போனாலும் நானும் ஒரு விவசாயி, நானும் ஒரு விவசாயி என்கிறார். ரவுடி எல்லாம் சொல்வாங்க. நான்பெரிய ரவுடி, நான் பெரிய ரவுடி என்று. அதே மாதிரி பச்சை துண்டை போட்டு கிட்டு பச்சை துரோகம் செய்யக்கூடிய  பழனிசாமி, இன்றைக்கு விவசாயி விவசாயி என்று தம்பட்டம் அடித்து கொண்டிருக்கிறார். மொத்தம் 20 மாநிலத்தில் கணக்கு எடுத்து இருக்கிறார்கள். அதில்  தமிழ்நாட்டை பொறுத்தவரை விவசாயத்தில் 19வது இடத்தில் இருக்கிறது. இந்த லட்சணத்தில் நான் வாங்கிய விருது மாதிரி, திமுக வாங்கியிருக்கிறதா. அப்படி  ஒரு கேள்வியையும் தொடர்ந்து கேட்டு கொண்டு இருக்கிறார். அதனால் நான் சொன்னால் ஒரு நாள் போதாது. விருது என்றால் விருது பெறுகிறவர்கள் உயரமான இடத்தில் இருக்க வேண்டும். அல்லது  அனைவருக்கும் தெரிந்தவராக இருக்க வேண்டும். திமுக ஆட்சி நடந்த போது அப்படி தான் பல விருதுகளை வாங்கியிருக்கிறோம். எப்படி என்றால்,  உலக வங்கி, வெளிநாடுகள், மத்திய அரசு, உச்ச நீதிமன்றம், குடியரசு தலைவர், பிரதமரால்  பல்வேறு விருதுகளை திமுக ஆட்சியில் வாங்கியிருக்கிறோம். அதை நான் குறிப்பிட்டு காட்ட கடமைப்பட்டு இருக்கிறேன். சிலவற்றை மட்டும் சொல்றேன்.

உலக சுகாதார நிறுவனம், குழந்தைகள் நலம் பேணியதற்காக 1996ம் ஆண்டு வழங்கியது. ஆசியாவிலேயே குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் 1999ம் ஆண்டு உலக வங்கி பாராட்டியிருக்கிறது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் 6 விருதுகளை பெற்று இருக்கிறேன். உள்ளாட்சி துறை அமைச்சராக நான் இருந்த போது நேரடியாக போய் வாங்கிட்டு வந்தேன். வாழ்ந்து காட்டும் திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக  உலக வங்கி மனதார பாராட்டி இருக்கிறது. பொதுவினியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக  உச்ச நீதிமன்றம் பாராட்டி இருக்கிறது. மகாத்மா காந்தி உறுதி வேலைவாய்ப்பு திட்டத்தை இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டை உச்ச நீதிமன்றம் பாராட்டி சான்றிதழ் வழங்கியிருக்கிறது. கொத்தடிமை முறையை  ஒழித்ததற்காக உச்ச நீதிமன்றம் பாராட்டி இருக்கிறது. மாற்றுதிறனாளிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் கடன் வழங்கி உயர்த்தியதற்காக குடியரசு தலைவர் விருது வழங்கப்பட்டது.  சிறந்த நிர்வாகத்துக்காக நகராட்சி துறையானது பன்னாட்டு நன்சான்றிதழ் விருதை 2012ம் ஆண்டு பெற்றது. தேசிய அளவில் மிகச்சிறந்த கிராமங்களில் பட்டியலில் 1446 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டது. இந்திய அளவில் ஊரக வளர்ச்சியில் முதலிடம், உள்ளாட்சியில் முதலிடம். இந்த விருதுகளை எல்லாம் பெற்றது தான் திமுக. இது எல்லாம் முதல்வருக்கு தெரியாது. அவருக்கு  தெரிந்தது எல்லாம் ஊழல், கரப்சன், கமிஷன், கலெக்சன் மட்டும் தான் தெரியும். இதை மட்டும் ஒழுங்காக அவர் செய்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு என்று சொன்னால் தொழில் நிறுவனங்கள் ஓடிப்போக கூடிய நிலையில் தான் தமிழகம் இருக்கிறது. காரணம் என்னவென்றால் எந்த தொழில்துறை நிறுவனமும் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்தால் இங்கே இருக்கிற ஆட்சி கமிஷன் கேட்கிறது. அதனால், பக்கத்து மாநிலங்களான தெலங்கானா, ஆந்திராவுக்கு ஓடிப்போகிறது. ஆக பழனிச்சாமி கையாளாகததற்கு இதை விட  வேறு சாட்சி, சான்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய திமுக ஆட்சியில் நான் இடையில் தொழில் துறை அமைச்சராக இருந்தது உங்களுக்கு தெரியும். அப்படி தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்தபோது சென்னையில் இருந்து பெரும்புதூர் வரை சென்னை காஞ்சிபுரம் வரையிலும், சென்னையில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் பல்வேறு தொழிற்சாலை அன்றைக்கு உருவாக்கப்பட்டது. இன்றைக்கு தொழிற்சாலைகள் வரவில்லை. ஏன் முதலீட்டாளர்கள் தொழிற்சாலைகளை துவங்கவில்லை. காரணம் இப்போது இருக்கின்ற ஆட்சியின் மீதும், முதல்வர் மீதும் ஒரு இம்மியளவுக்கூட நம்பிக்கை இல்லை.  அதனால் தான் இளைஞர்கள் இன்று வேலை வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த மக்களை சுரண்டக்கூடிய ஆட்சி தான் இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சி. ஆக மக்களை வெறுக்கும் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றால், வருகிற ஏப்ரல் 6ம் தேதி வர இருக்கின்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தர வேண்டும். ஏற்கனவே தலைவர் கலைஞர் 5 முறை ஆட்சி பொறுப்பில் இருந்து இருக்கிறார். அப்போது மக்களுக்கு என்னென்ன திட்டத்தை, என்னென்ன சாதனைகளை செய்தார் என்பது தெரியும். அதையை பின்பற்றி அதையை மனதில் ஏற்றி, திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறோம். கொரோனா இப்போது இரண்டாவது அலை வர ஆரம்பித்து விட்டது.  பெரும்பாலும் இங்கே மாஸ்க் போடவில்லை. கூட்டமான இடத்திற்கு வருகிற போது, நெருங்கி நிற்கும் போது தயவு செய்து மாஸ்க் போடுங்கள். ஏனென்றால் சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். உங்களை அன்போடு கேட்டு கொள்கிறேன். இப்போது தடுப்பூசி வந்திடுச்சி. நானும் போட்டு இருக்கிறேன். நீங்களும் போட்டு கொள்ளுங்கள். கலைஞருக்கு ஆறடி இடம் கொடுத்த பழனிசாமிக்கு தமிழ்நாட்டில் இனி கொடுக்கலாமா?. இவ்வாறு அவர் பேசினார்.

‘தேர்தல் பச்சோந்தி’
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உத்திரமேரூரில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “விவசாயிகளுக்குப் பச்சைத் துரோகம் செய்து வந்த முதலமைச்சர் பழனிசாமி, தேர்தலுக்காக இப்போது பச்சோந்தியாக மாறி, மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்ப்போம் எனக் கூறியுள்ளார்” இப்போது தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. என்ன ஆட்சி என்பது உங்களுக்கு தெரியும். எடுபிடி ஆட்சி. மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி விவசாயிகளைக் கொடுமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்ததை எதிர்த்து, அந்தப் போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்தினோம்.

அதற்குப் பிறகு பல போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். ஆனால் இப்போது முதல்வர் பழனிசாமி, தேர்தல் அறிக்கையில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து அதிமுக குரல் கொடுக்கும் என்று திடீர் ஞானோதயம் வந்தது போல, விவசாயிகளை ஏமாற்றுவதற்காக அந்த அறிவிப்பைச் சொல்லியிருக்கிறார். எனவே இந்தக் கொள்ளைக் கூட்டத்தை கோட்டையிலிருந்து விரட்டுவதற்கு, வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் நீங்கள் அத்தனை பேரும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார்.

Tags : Chennai ,DMK ,Fort ,St. George ,MK Stalin ,Ambattur election , Chennai has always been a DMK stronghold. We will capture Fort St. George: MK Stalin's speech during the Ambattur election campaign
× RELATED தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும்...