வெளியூரில் தங்கியிருக்கும் வாக்காளர்கள் ஓட்டுபோட வசதியாக 2024 மக்களவை தேர்தலில் ‘ரிமோட் வோட்டிங்’ திட்டம் அமல்: தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல்

புதுடெல்லி: வெளியூரில் தங்கியிருக்கும் வாக்காளர்கள் ஓட்டுபோட வசதியாக வருகிற 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ‘ரிமோட் வோட்டிங்’ திட்டம் அமலுக்கு வரவுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் பேரவை தேர்தலுக்கான பணிகளில் தலைமை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வரும்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அடுத்த மாதம் ஓய்வுபெறவுள்ளார். இதற்கிடையே டெல்லியில் ‘சன்சாத் ரத்னா விருதுகள் -2021’ வழங்கும் விழாவில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்திய தேர்தல் முறைகளில் நிறைய மாற்றங்களை கொண்டு வரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வாக்குப்பதிவு நடக்கும் நாளில் தங்கள் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க முடியாத வெளியூர் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அவர்கள் தொலை தூரத்தில் இருப்பதால் தங்களது வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக வெளியூர்களில் இருக்கும் வாக்காளர்கள் தங்களது உரிமையைப் பயன்படுத்திக்கொள்ள வசதியாக ‘ரிமோட் வோட்டிங்’ எனப்படும் ‘தொலைதூர வாக்களிப்பு’ வசதிகள் செய்து கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வருகின்ற 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான பணிகள் அடுத்த 2 முதல் 3 மாதங்களில் தொடங்கும். சென்னை ஐஐடி மற்றும் பிற ஐஐடிகளின் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவானது, ‘தொலைதூர வாக்களிப்பு’ அல்லது ‘பிளாக்செயின்’ வாக்களிப்பு முறையை நடைமுறைக்கு கொண்டு வருதல் குறித்து தீவிரமாக ஆராய்ச்சிகளை செய்து வருகிறது.

இத்திட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள், வெளி ஊர்களில் தங்கியிருக்கும் தொழில் வல்லுநர்கள், அத்தியாவசிய சேவைப் பணியில் உள்ளவர்கள், மாணவர்களுக்கு நன்மை பயக்கும். அவர்கள் தங்களது வாக்குரிமையை எளிதாக பெறமுடியும். இந்த திட்டத்தின்படி வாக்களிப்பு அதிகரிக்கும். இந்த வசதியை நடைமுறைப்படுத்தும் முன் அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து  தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்படும். இத்திட்டம் அமலுக்கு வரும்பட்சத்தில் இந்திய தேர்தல் முறையில் முக்கியமாக தேர்தல் சீர்திருத்தமாக அமையும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வாக்களிக்கும் முறையை அடுத்த ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் தேர்தல் ஆணையம் நடைமுறைக்கு கொண்டு வரும். வெளிநாடுவாழ் இந்தியர்கள் ‘இ-தபால்’ மூலம் வாக்களிக்க அனுமதிக்கும் விதிகளை திருத்துவதற்கான முன்மொழிவை மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.

மத்திய வெளிவிவகாரங்களுக்கான அமைச்சகம் அளித்த பரிந்துரையின்படி தலைமை தேர்தல் ஆணையம் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு முன்மொழிவை அனுப்பியது. தற்போது நடைபெறும் 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்குப் பிறகு இத்திட்டம் முழுமையடையும் என்று நம்புகிறோம். வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கான தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் அண்மையில் கூறியிருந்தார். இதனை தலைமை தேர்தல் ஆணையம் வரவேற்கிறது. மேலும், வாக்குப்பதிவு மையத்தில் ஒரு வாக்காளர் தன்னை அடையாளம் காட்டுவதற்காக பல அட்டைகளை காட்டலாம் என்ற முறையை மாற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. அதற்கான வழிகளும் தொழில்நுட்ப குழுவுடன் இணைந்து ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு பேட்டியில் கூறியுள்ளார்.

Related Stories:

>