×

தஞ்சம் தேடி வந்துள்ள மியான்மர் போலீசாரை திருப்பி அனுப்ப முடியாது: மோடிக்கு மிசோரம் முதல்வர் கடிதம்

அய்சால்: ‘மிசோரமில் தஞ்சம் அடைந்துள்ள மியான்மர் போலீசாரை திருப்பி அனுப்ப முடியாது,’ என்று பிரதமர் மோடிக்கு இம்மாநில முதல்வர் சோரம்தங்கா கடிதம் எழுதியுள்ளார். மியான்மரில் புரட்சி மூலம் ஆட்சியை பிடித்துள்ள ராணுவத்தை எதிர்த்து, இந்நாடடு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது ராணுவம் நடத்தி வரும் துப்பாக்கிச்சூட்டில் இதுவரையில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்நாட்டை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட போலீசார், ராணுவ ஆட்சிக்கு பயந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு தப்பி வந்துள்ளனர். இவர்களில் பலர், மிசோரம் மாநிலத்தில் உள்ள ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை உடனடியாக திருப்பி அனுப்பும்படியும், அண்டை நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவி வருபவர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் மிசோரம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகலாந்து மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு மிசோரம் முதல்வர் சோரம்தங்கா நேற்று எழுதியுள்ள கடிதத்தில், ‘அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வந்தவர்களை மனிதநேயத்துடன் அணுக வேண்டும்.

எனவே, மியான்மரில் இருந்து வந்தவர்களை திருப்பி அனுப்பக் கூடாது. இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சகம் எழுதியுள்ள கடிதம் எங்களுக்கு ஏற்புடையதாக தெரியவில்லை. மியான்மர் அகதிகளுக்கு தஞ்சம் அளிப்பது பற்றி விரைவாக முடிவு எடுக்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

Tags : Mizoram ,Chief Minister ,Modi ,Myanmar police , Have been seeking refuge Myanmar police cannot be deported: Mizoram chief minister's letter to Modi
× RELATED மிசோரமுக்குள் பெர்மிட் இல்லாமல் நுழைந்த 1000 பேர் கைது