×

காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி சட்டக்கல்லூரி அமைக்கப்படும்: திமுக வேட்பாளர் எழிலரசன் வாக்குறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி காஞ்சிபுரத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர்   எழிலரசன் வாக்குறுதி அளித்துள்ளார். திமுக மாநில மாணவரணி செயலாளரும்-காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான வக்கீல் எழிலரசன்  செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தது: கடந்த ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக, உள்ளாட்சி அமைப்புகளே இல்லாத சூழலில் 5 ஆண்டு காலத்தில் பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்றத்தில் பேசி திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன்.

பொன்னேரிக்கரை  பகுதியில் ரயில்வே மேம்பாலம், புதிய மாவட்ட விளையாட்டு அரங்கம், அரசு தலைமை மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் கொண்டுவரப்பட்டு அதற்கான கட்டிடமும் எம்எல்ஏ  நிதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல விபத்து  சிகிச்சை பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், மகப்பேறு மருத்துவமனைகாக ஒரு உயர் படிப்பு நிறுவனமாக காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனை தரம் உயர்த்தப் பட்டுள்ளது.  அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில்  உலகத்தரம் வாய்ந்த கருவிகள் பொருத்தி மிகச் சிறந்த மருத்துவம் செய்ய வேண்டும் என்பதற்காக ரூ.120 கோடி திட்ட மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், மருத்துவமனைக்கான கட்டிடங்கள், பள்ளி கட்டிடங்கள், சுத்திகரிப்பு குடிநீர், மேல்நிலை குடிநீர்த் திட்டம் அங்கன்வாடி புதிய ரேஷன் கடைகள் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளையும் செய்துள்ளேன். காஞ்சிபுரம் மாவட்ட மக்களின்  நீண்டநாள் கோரிக்கையான அரசு மருத்துவக்கல்லூரி , சட்டக்கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி கொண்டுவர பாடுபடுவேன். அதைப்போல குடிநீர் பிரச்சினையை தீர்க்க கூடிய வகையில் இருக்கக் கூடிய காவிரி கூட்டு குடிநீர்  திட்டம், புறநகர்  பேருந்து நிலையம், பட்டுப் பூங்கா. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தரக்கூடிய தொழில் மையம், வையாவூர் பகுதியில் புதியதாக காகித தொழிற்சாலை ஒன்றை உருவாக்கவும் பாடுபடுவேன். எனவே, காஞ்சிபுரம் தொகுதி உதயசூரியன்  சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.உடன், திமுக அவைத்தலைவர் சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே.பி.சீனிவாசன், காங்கிரஸ் கட்சி எஸ்.எல்.என்.எஸ்.விஜயகுமார்,  சாட்சி சண்முகம் உள்ளிட்டோர் இருந்தனர்.



Tags : Government Medical College Law College ,Kanchipuram ,DMK ,Ezhilarasan , Government Medical College Law College to be set up in Kanchipuram: DMK candidate Ezhilarasan promises
× RELATED மாமல்லபுரம் சுற்று வட்டார பகுதிகளில்...