திருவனந்தபுரம்: டாலர் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராய் விஜயனை சிக்க வைக்க முயற்சிப்பதாக கூறப்படும் விவகாரத்தில், அமலாக்கத் துறைக்கும் கேரள போலீசாருக்கும் மோதல் வலுத்து வருகிறது. கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கிலும், டாலர் கடத்திய வழக்கிலும் சொப்னா, கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சிவசங்கரன் மட்டும் ஜாமீன் பெற்றுள்ளார். இந்நிலையில், சொப்னா பேசிய ஆடியோ பதிவு ஒன்று, சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியானது.
அதில், ‘தங்கம், டாலர் கடத்தல் வழக்கில் முதல்வரின் பெயரை கூற வேண்டும் என்று மத்திய அமலாக்கத்துறை என்னை கட்டாயப்படுத்தியது,’ என அவர் கூறியிருந்தார். இதன் அடிப்படையில், கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராய் விஜயனை சிக்க வைக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் சதித் திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டி, அவர்களின் மீது கேரள போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சொப்னாவின் ஆடியோ வெளியான போது மத்திய உளவுத்துறை அதிகாரிகள் சிறைக்கு சென்று விசாரித்தனர். அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், மத்திய உளவுத்துறையின் இந்த விசாரணை அறிக்கை நேற்று வெளியானது. அதில், ‘அமலாக்கத்துறையின் காவலில் சொப்னா இருந்தபோது, கேரள பெண் போலீஸ் ஒருவர் அவருக்கு பாதுகாப்பு அளித்தார். ‘கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராய் விஜயன், சிவசங்கரனின் பெயர்களை அமலாக்கத் துறையிடம் கூறாமல் இருந்தால். உன்னை சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று சொப்னாவிடம் அந்த பெண் போலீஸ் பேரம் பேசியுள்ளார். ,’ என கூறப்பட்டுள்ளது. இந்த ரகசிய விசாரணை அறிக்கை தற்போது கசிந்துள்ளதின் மூலம், கேரள போலீசுக்கு போட்டியாக அமலாக்கத் துறையும் இறங்–்கி இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த இருதரப்பு அதிகார மோதல், வரும் நாட்களில் மேலும் அதிகமாகலாம் என கருதப்படுகிறது.
சிவசங்கரன்தான் காரணம்
உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், ‘கேரள முதல்வர், கேரள அரசுடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு எதிராக போலி ஆவணங்களை தயாரிக்க, சிவசங்கரன் உதவி வருகிறார். அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது கேரளா குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்வதற்கு சிவசங்கரனின் இந்த நடவடிக்கைதான் காரணம். எனவே, அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.