தமிழக மக்கள் சிந்தித்து வாக்களிக்கும் பண்பாடு கொண்டவர்கள் பணத்தால் வாக்குகளை வாங்க நினைத்தால் அது நடக்காது: மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

* சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

தமிழகத்தில் பல அணிகள் போட்டியிட்டாலும் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் எந்த அளவுக்கு வெற்றி கிடைத்ததோ, அதை விட கூடுதலான அளவுக்கு வெற்றி கிடைக்கிற  மாதிரிதான் நிலைமை இப்போது உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு இடத்தில்தான் அதிமுக வெற்றி பெற்றார்கள். ஆனால், இந்த முறை அதுகூட வெற்றி பெற மாட்டார்கள். ஏனென்றால், கடந்த இரண்டு வருடத்துக்கு முன்பு  அதிமுக-பாஜவின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு இருக்கின்றன. 2 வருடம் முன்னாடி நிலைமையே அப்படியென்றால் இப்போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு போன்ற பல்வேறு  காரணங்களால் மக்கள் அதிமுக-பாஜ மீது கடும் கோபத்தில் உள்ளனர். இதனால், இந்த முறை திமுக கூட்டணிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

* 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி உங்களது பார்வையில் எப்படி இருக்கிறது?

10  ஆண்டுகால அதிமுக ஆட்சியில் குறிப்பிட்டு சொல்லும்படி மக்கள் நலனுக்கான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அது விவசாயத்துறை ஆகட்டும், தொழில் துறை ஆகட்டும். வேலைவாய்ப்புகளாக இருக்கட்டும் அல்லது நவீன  ஐடி தொழில்நிறுவனங்கள் ஆகட்டும். மக்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது.

குறிப்பாக, சிறுகுறு தொழில்கள் சீரழிந்து போய் விட்டது. விவசாயத்தை பொறுத்தவரையில் விவசாய உற்பத்தி அதிகம் என்று ஒவ்வொரு ஆண்டும் குத்து மதிப்பாகத்தான் சொல்கின்றனர். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம்  கணக்குதான் கூட்டி போடுகின்றனர். உண்மையில் விவசாய உற்பத்தி பெருகி இருக்கிறதா என்று கிராமங்களில் சென்று போய் பார்த்தால் வீழ்ச்சி தான் ஏற்பட்டுள்து. கணக்கில் தான் உற்பத்தி அதிகமாக இருக்கிறது.

மக்கள் இப்போது பண நெருக்கடியில் தவிக்கும் நிலையில்தான் உள்ளனர். இன்னொரு பக்கம் அதிகாரத்தின் பலனை ஆட்சியாளர்கள் அனுபவித்துள்ளனர். உள்ளாட்சிகள் முதல் கோட்டை வரை பார்த்தால் அவர்கள் அதிகார பலனை  அனுபவிக்கின்றனர். அதனுடைய பலன் மக்களுக்கு போகவில்லை. இதனால், அதிமுக அமைச்சர்கள் ஆகட்டும், எம்எல்ஏக்கள் ஆகட்டும், பொறுப்பில் உள்ளவர்கள் ஆகட்டும். அவர்கள் எல்லோரும் நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு அதிபதி  என்கிற அளவுக்கு நிலைமை மாறி விட்டது. அதே மாதிரி பார்த்தால் மணல் கொள்ளை, கனிமவளக் கொள்ளை, ஒப்பந்தங்கள் கொள்ளை, துணை வேந்தர் நியமனம், பணி மாறுதல், ஆசிரியர் நியமனத்துக்கு லஞ்சம் என எல்லாத்துறைகளிலும்  இந்த ஆட்சியில் லஞ்சம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்பதை நாம் பார்க்க முடிகிறது.

* திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துமா?

எங்களது தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து கூறியுள்ளோம். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள அனைத்து அமைச்சர்கள் மீதும் முறையான வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஊழல் மேலும் மேலும் புரையோடி  போவதை அனுமதிக்கவே முடியாது. அது ஒட்டுமொத்தமாக சமூகத்தை கொல்லுகின்ற புற்றுநோய் போன்றது. அமைச்சர்கள் மட்டுமில்லை, அதிகாரிகளையும் ஊழல் விசாரணையின் கீழ் உட்படுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

* திமுக தேர்தல் அறிக்கை மாதிரி அதிமுக  காப்பி அடித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருப்பதாக கூறப்படுகிறதே?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 தருவதாக கூறினார். ஆனால், முதல்வர் எடப்பாடி இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,500 தருவதாக கூறினார். அவர்கள் சொல்வதை விட ஒருபடி  மேலே கூட சொல்ல வேண்டும் என்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார். அதிமுக தேர்தல் அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் சொல்லவில்லை. 10 வருடமாக அதிமுகதான் ஆட்சியில் இருக்கிறது. 10 வருடமாக  ஆட்சியில் இருப்பவர்கள் ரூ.1500 கொடுத்து இருக்க வேண்டியதுதானே. இவ்வளவு நாளாக இதை செய்யாமல் இப்போது ஏன் செய்வோம் என்று கூறுகிறார்கள். அதேபோன்று சிலிண்டர் 6 தருவோம் என்று கூறுகிறார். ஒரு சிலிண்டராவது இப்போது கொடுத்திருக்கலாம் அல்லவா. 10 வருடமாக ஆட்சியில் இருக்கும்போது எதுவுமே செய்யவில்லை என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

* திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை குறிவைத்தே பிற எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்கின்றனர். ஆனால், முதல்வர் எடப்பாடி குறித்து அவர்கள் வாய் திறப்பதில்லையே ஏன்?

அதிமுக-பாஜ ஆட்சியை அப்புறப்படுத்த போராடும்போது, சில கட்சிகள் ஓட்டுகளை பிரிக்கும் போது, அந்த போராட்டத்தை பலவீனப்படுத்துவது போன்று தான் இருக்கும். எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க தான் உதவி செய்யும். அதன் வெளிப்பாடுதான்  அவர்கள் திமுக தலைவரை குறிவைக்கின்றனர். அவர்கள் சொல்லப்போனால், பாஜவையும், ஆளும் ஆட்சியாளர்களையும் தான் தாக்கி பேச வேண்டும். ஆகவே அவர்களின் நோக்கம் அதிமுக-பாஜ எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கத்தான் பிரசாரம்  செய்கின்றனர்.

* தேர்தல் பிரசாரம் செய்ய வரும் அதிமுக வேட்பாளர்களை மக்கள் விரட்டி அடிப்பதை காண முடிகிறதே?

10 ஆண்டு ஆட்சி நடத்துபவர்கள் எதுவும் செய்யவில்லை. ஆனாலும், அவர்கள் ஓட்டு கேட்டு வரும்போது மக்கள் கொந்தளிக்கத்தான் செய்வார்கள். இப்போது ஓபிஎஸ் மற்றும் பல அமைச்சர்கள் ஊருக்குள் போக முடியவில்லை என்றால் என்ன  அர்த்தம்? அந்த அளவுக்கு இந்த ஆட்சி மீது மக்களுக்கு அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு நாளாக ஊருக்குள் வராமல், என்ன எதுவென்று கேட்காமல் இருந்து விட்டு, மக்கள் கொரோனா மற்றும் பேரிடர்களால் பாதிக்கும் போது எதுவும்  கேட்கவில்லை. இப்போது ஓட்டு கேட்டு வரும்போது மக்கள் திருப்பி கேள்விக் கேட்கிறார்கள். இவ்வளவு நாட்களாக மக்களை நீங்கள் உதாசீனப்படுத்தியதால் மக்கள் உங்களை உதாசீனப்படுத்துகின்றனர். இது மக்களுக்கான சுற்று என்று வைத்துக்  கொள்ளுங்கள்.

* சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியினர் பணத்தை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்பதாக கூறப்படுகிறதே?

நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் செலவழிக்காத பணமா, அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டுமே. பணத்துக்கு மட்டுமே மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தமிழக மக்கள் எதையும் சிந்தித்து, எது தேவை என்று  பார்த்து வாக்களிக்கும் பண்பாடு கொண்டவர்கள். அவர்கள் ஓட்டை பணம் காட்டி வாங்கி விடலாம் என்று நினைத்தால் அது நடக்காது.

* இந்த தேர்தலுக்கு பிறகு அதிமுக நிலைமை என்னவாக இருக்கும்?

அதிமுக நிலைமை இப்போதே அது ஒருங்கிணைந்த கட்சியாக இல்லை. ஒவ்வொரு ஊரிலும் பலவிதமான அணியாக செயல்படுகின்றனர். மாநில அளவில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளராக உள்ளனர். அவர்கள்  ஒருங்கிணைப்பே இல்லாதவர்களாக தான் இருக்கின்றனர். இதுவரை அதிகாரம் இருந்ததால் கட்சியை ஓட்டினார்கள். தேர்தலுக்கு பிறகு படுதோல்வி அடையும் நிலையில், இந்த கட்சியை கட்டுப்படுத்தி ஒருங்கிணைப்பதற்கான வாய்ப்பு குறைவு.  அந்த கட்சி சிதறிதான் போகும். அவர்கள் கூடவே பாஜவை வைத்துள்ளனர். பாஜ எப்போது ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி சேருகிறார்களோ, அப்போது கூட்டணியில் இவர்கள் பெரிய கட்சியாக மாறி விடுவார்கள் என்பதை தான் நாம் பல  ஊரில் பார்க்கிறோம். அதனால், அதிமுக கூட்டணியில் சேர்ந்த பாஜ பெரிய கட்சியாகும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பாஜ என்பது ஆக்டோபஸ் மாதிரி தான். அதிமுகவை சாப்பிட்டு விட்டு செரிமானம் செய்தாலும் நாம்  ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே, அதிமுக இயக்கத்துக்கு எதிர்காலம் குறைவு தான். அதற்கான சூனியத்தை அவர்களே வைத்துள்ளனர்.

* அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக போலீசார் வாகனத்தில் பணம் கொண்டு செல்வதாக புகார் வருகிறதே?

ஒவ்வொரு தேர்தலிலும் நாம் பார்க்கிறோம். ஆம்புலன்ஸ், காவல் வாகனத்தில் பணம் எடுத்து செல்வது வழக்கமாக நடக்கிறது. நான் சென்னையில் இருந்து திண்டுக்கல் சென்று கொண்டிருக்கிறேன். என்னுடைய வாகனத்தை 2 இடங்களில்  தேர்தல் அலுவலர்கள் சோதித்தனர். அதேபோன்று ஆளும் கட்சி வாகனங்கள், பிரமுகர்கள் வீடுகளில் சோதிப்பதில்லை. தேர்தல் ஆணையம் ஆசிர்வாதத்துடன் தான் இவையெல்லாம் நடக்கிறது.

Related Stories:

>