×

சொன்னாரே செஞ்சாரா? ரயில்வே மேம்பாலம் கொண்டு வர முயற்சிக்காத எம்எல்ஏ: குன்னூர் தொகுதி எம்எல்ஏ சாந்தி ராமு

நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதி மலை கிராமங்கள் நிறைந்த தொகுதியாகும். இந்த தொகுதியில் உள்ள மக்களின் முக்கிய தொழிலாக தேயிலை பறிப்பதும், ஏற்றுமதி செய்வதுமாகும். தேயிலை பறிக்கும் தொழிலில் இந்த பகுதியை சேர்ந்த  5 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். தேயிலை ஏற்றுமதி நிறுவனங்களில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.  இந்த தொகுதியின் எம்எல்ஏவாக சாந்தி ராமு உள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலுக்கு முன் வரை அவர் தேமுதிக மாவட்ட செயலாளராக இருந்தார்.

 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னரே அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில்  சேர்ந்தார். 2016ம் சட்டமன்ற தேர்தலின்போது குன்னூர் தொகுதி வேட்பாளராக அவரை ஜெயலலிதா அறிவித்தார். கட்சிக்கு வந்த சில மாதங்களே ஆன  நிலையில் சாந்திராமுக்கு சீட் ஒதுக்கியது கட்சி நிர்வாகிகளிடம் பெரும் அதிர்வலையை  ஏற்படுத்தினாலும் ஜெயலலிதா அறிவித்ததால் நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றினர். தேர்தலில் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாந்திராமு எம்எல்ஏவானார். கடந்த தேர்தலின்போது அவர் தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை வாங்கித்தரப்படும். படுகர் இன மக்களை பழங்குடியின மக்கள் பட்டியலில்  சேர்க்க பாடுபடுவேன். குன்னூர் மக்களின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோத்தகிரி பகுதியில் அரசு கல்லூரி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். குன்னூரில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை  எடுக்கப்படும் போன்ற வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மேலும் ரயில்வே மேம்பாலம் கொண்டுவர அவர் முயற்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மலை ரயில் செல்லும்போது குன்னூரில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது.  இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே எம்எல்ஏ வாக்குறுதிப்படி ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் குன்னூருக்கு பல பகுதிகளில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. ஆனால் அந்த பேருந்துகளை நிறுத்த பேருந்து நிலைய வசதி இல்லை. அதற்கான முயற்சியையும் எம்எல்ஏ எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

‘‘குடிநீர் திட்ட பணிக்கு  சொந்த நிலம்’’

குன்னூர் எம்எல்ஏ சாந்திராமு கூறுகையில், ‘‘எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம், கோத்தகிரி அளக்கரை கூட்டு குடிநீர் திட்டம், தொகுதி முழுக்க சாலைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. 100 சமுதாய கூடங்கள், மருத்துவமனைகளுக்கு தடுப்பு மற்றும்  சுற்றுச்சுவர். அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கோத்தகிரியில் ரூ.6 கோடி செலவில் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. ட்ரூக் மற்றும் பக்காசூரன் மலைக்கு சாலை, குடிசை மாற்று வாரியம்  சார்பில் ஏழை எளிய மக்களுக்கு 250 குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி நடுஹட்டி பஞ்சாயத்து பகுதியில் 250 குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன. கோத்தகிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக சொந்த நிலத்தில் 5 சென்ட்  ஒதுக்கீடு செய்துள்ளேன். அரவேணு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்காக இடம் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

‘‘தேயிலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வில்லை’’

நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் முபாரக் கூறிகையில், ‘‘குன்னூர் சட்டமன்ற தொகுதி  எம்எல்ஏ அலுவலகம் எப்போதும் மூடப்பட்டே கிடக்கும். எப்போதாவதுதான்  அலுவலகத்திற்கு வருவார். கடந்த தேர்தலில் இவர் அளித்த எந்த ஒரு  வாக்குறுதியையும்  நிறைவேற்றவில்லை. தான் சார்ந்த பகுதியில் உள்ள அரசு தேயிலை தோட்ட  தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பெற்றுத்தரவில்லை. மக்களுக்கு அவர் சேவை செய்ததைவிட  கடந்த 5 ஆண்டுகளில் அவர் சொத்தை  சேர்த்துக்கொண்டார்’’ என்றார்.




Tags : MLA ,Gunnur ,Shanti Ramu , Did you say red? MLA who did not try to bring in the railway flyover: Coonoor constituency MLA Shanthi Ramu
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...