நச்சுனு 4 கேள்வி: ‘கமிஷன்’ வேலுமணியை தோற்கடிக்க களம் இறங்கியுள்ளேன்.. தமாகாவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம்

* தமாகாவில் இருந்தபோது அமைச்சர் வேலுமணியிடம் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு சென்ற நீங்கள் இப்போது திடீரென அவருக்கு எதிராக களம் இறங்கியிருப்பது ஏன்?

கோவை மாவட்டத்தில் இருக்கிற அமைச்சர் வேலுமணி, ஏற்கனவே நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தமாகா நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஒரு கவுன்சிலர் சீட் கூட கொடுக்கவில்லை. நான் கேட்டு கொண்டும் கூட நீலகிரி மாவட்ட  தலைவர் அவருக்காக ஒரு சீட் கேட்டார். அதையும் தர மறுத்துவிட்டார்.

 இது நியாயமா?. இதுபற்றி ஓபிஎஸ்-இபிஎஸ்சிடம் முறையிட ஜி.கே.வாசனிடம் கூறினேன். ஆனால் எனது கருத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது வேலுமணியின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்கள் மத்தியில் எடுத்து  கூறவே அவருக்கு எதிராக களம் இறங்கியுள்ளேன்.

 * ஜி.கே.வாசன் அப்படி என்ன தான் உங்களுக்கு துரோகம் செய்துவிட்டார்?

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்தேன். அதை ஜி.கே.வாசனுக்காக தூக்கி எறிந்துவிட்டு வெளியில் வந்தேன். ஆனால் எந்த யுவராஜாவுக்காக ராகுல்காந்தியிடம் தகராறு செய்துவிட்டு கட்சியை உடைத்து வெளியே வந்தோமோ, அந்த யுவராஜாவின் பெயரை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு எழுதி கொடுத்துள்ளார். முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர்  குடியிருந்து வரும் தொகுதி அது. அதை யுவராஜாவுக்கு ஒதுக்கி கொடுத்துள்ளார். லால்குடி வேட்பாளர் தர்மராஜூக்கும் கட்சிக்கு சம்பந்தமில்லை. அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.

 இப்படி எல்லாம் தொகுதியை கொடுத்து விட்டு, எனக்கு தெரியாமலே பட்டியலை கொடுத்து விட்டு, தொகுதி எண்ணிக்கையை மட்டும் நீங்கள் பேசுங்கள் என்று சொன்னார். பிறகு தான் இவரது பட்டியல் விவகாரம் எனக்கு தெரிந்தது. ஓபிஎஸ்  மற்றும் அமைச்சர்கள் எல்லாம் திருவிகநகரில் என்னை நிற்க வற்புறுத்துகிறார்கள். ஆனால் நீங்கள் நில்லுங்கள் என்று ஜி.கே.வாசன் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.

எனது நெஞ்சு கொதித்தது. எனக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை செய்துவிட்டார் என்ற எண்ணம் என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. ஜி.கே.மூப்பனார் உயிரோடு இருந்திருந்தால் இப்படி செய்திருப்பாரா?.

* திமுக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் இறங்கி விட்டீர்கள் என்று சொல்கிறார்களே? வால்பாறையில் சுயேச்சையாக நிற்க முடிவு செய்தேன். எனக்கு இந்த தொகுதியில் இருக்கும் ஆதரவை பார்த்து திமுகவினர் மு.க.ஸ்டாலினுக்கு சொல்லியிருக்கிறார்கள்.  அவர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘‘நீங்கள்  கேட்டதெல்லாம் கலைஞர் மூலம் வால்பாறை தொகுதிக்கு செய்து தந்திருக்கிறீர்கள். ஆட்சிக்கு வந்ததும் இன்னும் அதிகமாக செய்து தருவோம். எனவே நீங்கள் சுயேச்சையாக நிற்க வேண்டாம்’’ என்று உரிமையோடு கேட்டுக் கொண்டார்.

 அதை ஏற்றுக் கொண்டு சுயேச்சையாக நான் நிற்பதில்லை என்று உடனடியாக அறிவித்துவிட்டேன். இதுதான் நடந்தது. எனவே திமுக வெற்றிக்கும், மு.க.ஸ்டாலின் முதல்வராவதற்கும் நானும் எனது கோவை மாவட்ட தமாகா நிர்வாகிகள்,  தொண்டர்கள் உழைப்போம்.

* அடுத்த கட்டமாக உங்கள் நடவடிக்கை என்ன?

 என்னை அரசியலில் இருந்து ஒழித்து கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்த ‘கமிஷன் மணி’, சாரி ‘வேலுமணியை’ தோற்கடிக்க வேண்டும். என்னிடம் சில ஆதாரங்கள் உள்ளது. அதன் அடிப்படையில் அவருக்கு எதிராக களம்  இறங்குவேன்.

Related Stories:

>