×

தேர்தல் பணி அதிகாரிகளுக்கு உதவியாக அழைத்துவிட்டு கழிவறைகள் தூய்மை, தட்டுகளை கழுவ பயன்படுத்தப்படும் வி.ஏ.ஓ.க்கள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

வேலூர்: வேலூர் சுற்றுலா மாளிகையில் பொது பார்வையாளருக்கு உதவியாக, தேர்தல் பணிக்கு அழைத்துவிட்டு கழிவறைகளை தூய்மை செய்ய வைப்பதாக விஏஓ உதவியாளர்கள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். தேர்தலையொட்டி, பணம், பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள் என்று தனித்தனியாக ஒவ்வொரு சட்டமன்ற ெதாகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பொதுப்பார்வையாளர்கள் வேலூர் சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு தேர்தல் தொடர்பான பணிகளுக்கு உதவியாக இருக்க வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 கிராம நிர்வாக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுப்பார்வையாளர்களுக்கு நியமிக்கப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர்களை, தேர்தல் பணிக்கு பயன்படுத்தாமல், வேலூர் சுற்றுலா மாளிகையில் உள்ள கழிவறைகளை தூய்மை செய்ய பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து கிராம நிர்வாக உதவியாளர்கள் கூறுகையில், ‘‘வேலூர் சுற்றுலா மாளிகையில் தேர்தல் பொதுப்பார்வையாளர்களுக்கு தேர்தல் தொடர்பான பணிகளுக்கு உதவி செய்வதற்காக எங்களை நியமித்தனர்.

ஆனால், இங்குள்ள கழிவறைகளை தூய்மை செய்யவும், அறைகளை சுத்தம் செய்யவும், அதிகாரிகள் சாப்பிட்ட தட்டுகளை கழுவி வைக்கவும் கட்டாயப்படுத்துகின்றனர். இதுகுறித்து அங்குள்ள துணை தாசில்தாரிடம் தெரிவித்தால், இதுபோன்ற வேலைகள் செய்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றார். நான், வாக்குச்சாவடி மைய அலுவலராக உள்ளேன். தேர்தல் பணி என்று சொல்லிவிட்டு இதுபோன்ற பணிகளில் ஈடுபடுத்த ஏன் எங்களை அழைக்க வேண்டும்’’ என்று வேதனையுடன் தெரிவித்தனர். சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள்  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வி.ஏ.ஓ.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Calling for help to election mission officials Clean the bathrooms, wash the dishes VAOs used: urge to take action
× RELATED சென்னையில் விதிமீறலில் ஈடுபட்ட 1,022...