×

அடையாறு ஆற்றங்கரையில் தடுப்புச்சுவர்: சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி

தாம்பரம்: பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, நேற்று பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட அனகாபுத்தூர் பகுதியில் வீடு வீடாக  நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர்தூவி வரவேற்றனர்.

அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில், ‘மழைக்காலங்களில் அனகாபுத்தூர் பகுதியிலுள்ள அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றங்கரையோரம் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்து விடுவதால், ஒவ்வொரு ஆண்டும்  அப்பகுதி பொதுமக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகி வருகிறீர்கள். இவ்வாறு வெள்ளநீர் குடியிருப்புகளில் புகாமல் இருக்க அடையாறு ஆற்றின் கரையோரம் தடுப்பு சுவர் கட்டித் தருவேன்.

மேலும், இதுபோல பல்வேறு திட்டங்களை பல்லாவரம் தொகுதி மக்களுக்கு செய்திட அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும், மீண்டும் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைந்திட அனைவரும் தவறாமல் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்’’ என்றார். பிரசாரத்தின்போது, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த  ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



Tags : Adyar River ,Chitlapakkam ,Rajendran , Barrier on the banks of the Adyar River: Chitlapakkam Rajendran confirmed
× RELATED அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து...