×

பல்லாவரம் - தாம்பரம் இடையே ரயில்சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

சென்னை: தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3வது ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சில புறநகர் ரயில்கள் பல்லாவரம் வரையும், சில ரயில்கள் தாம்பரம் வரையும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே  அறிவிப்பு வெளியிட்டது. அறிவிக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் பல்லாவரம் ரயில் நிலையம் வரையில் ஒழுங்காக இயக்கப்பட்டது. பல்லாவரம் ரயில் நிலையத்தை தாண்டியவுடன் அனைத்து ரயில் நிலையங்களுக்கு இடையேயும் சிக்னல்  கிடைக்காத காரணத்தால் ரயில்கள் அனைத்தும் 45 நிமிடங்களுக்கு மேல் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

முதியோர், பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி, தண்டவாளத்தின் வழியே நடந்து சென்று தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையத்தை அடைந்தனர். பின்னர், அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் மற்றும் ஆட்டோ பிடித்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். முறையான அறிவிப்பு செய்யப்படாததால் பல்லாவரம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பயணிகள்  கடும் அவதியுற்றனர். ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்தி ரயில் புறப்படுவதற்கு காலதாமதம் ஆகும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தால், பஸ் அல்லது ஆட்டோ பிடித்து சென்றிருப்போம்.

ஆனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இப்படி நடுவழியில்  கொண்டுவந்து ரயிலை நிறுத்தி வைத்திருக்கிறீர்களே இது என்ன நியாயம், என்று பயணிகள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.  சிக்னல் கிடைக்கவில்லை என்றால் அதற்கு முந்தைய ரயில் நிலையத்திலேயே ரயிலை நிறுத்தி வைத்துவிட்டு காலதாமதம் பற்றி பயணிகளுக்கு தெரிவித்திருந்தால் இப்படி அசவுகரியங்கள் ஏற்பட்டிருக்காது. இனியாவது அதிகாரிகள் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் தெரிவித்தனர்.

Tags : Pallavaram ,Tambaram , Pallavaram - Tambaram train service affected: Passengers suffer
× RELATED பல்லாவரத்தில் அடுத்தடுத்து 3 கார்கள்...