திமுக கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக அதிமுக-பாஜ கூட்டணிக்கு கமல், சீமான், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மறைமுக ஆதரவு: தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் ஜெகத்கஸ்பர்

அதிமுக-பாஜவுக்கு மறைமுகமாக ஆதரவாக தரும் வகையில் கமல், சீமான், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஆரம்பித்துள்ள கட்சிகள், சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிக்கும் சூழ்ச்சியை செய்வதாக புகார் வருகிறதே? ஒரு பொறுப்பான அரசியல் கட்சி என்பது நாடு இன்று எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்னை என்ன என்பதை அடையாளப்படுத்தி அதை எதிர்கொள்ள வேண்டும். நாடு இன்று சந்திக்கிற அடிப்படை உரிமை பிரச்னை என்பது மதவெறி அரசியல், அறிவிக்கப்படாத சர்வாதிகாரம், இந்த நாட்டின் வளங்கள் அதானி, அம்பானி போன்ற ஒரு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது. மக்களாட்சி அமைப்பு நெருக்கடி உள்ளாகும்போது, அனைவரும் அதை எதிர்ப்பது தான் பொறுப்பான கட்சிகளின் கடமையாக இருக்க வேண்டும்.

ஆனால், அதை விடுத்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத ஒரு கட்சியை தான் தாக்குவோம் என்று வரிந்து கட்டுவதன் மூலம் அவர்கள் மறைமுகமாக பாஜவுடைய தோழமை அணி என்பதை தவிர்க்க முடியாது. சகாயம் ஐஏஎஸ் அதிகாரி ஒரு கொள்கையை முன்வைத்து அரசியலுக்கு வந்தால் மறுக்க முடியாது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாதவர்களுக்கு எதிராக போட்டியிடுகிறேன் என்று சொல்வதன் மூலம் அவர், ஆர்எஸ்எஸ் திட்ட வரைவின் படி தான் செயல்படுகிறார் என்கிற ஐயப்பாட்டை உருவாக்கி இருக்கிறது. தங்களால் வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்கு தெரியும். இன்றைக்கு தேவை சர்வாதிகார, மதவாத, பாசிச சக்தியை தமிழகத்தில் தடுத்து நிறுத்த போவது யார் என்பதுதான் அடிப்படை கேள்வி. அதை அதிமுக செய்யாதது என்பது நமக்கு இந்த 4 ஆண்டுகளில் தெரிந்தது. மத்திய அரசுக்கு அடிமையாக இருந்தார்கள்.

தமிழகத்தின் கல்வி உரிமையை காவு கொடுத்தனர். தமிழகத்தின் பல்வேறு வேலைவாய்ப்பு உரிமைகள், ஏன் தமிழத்தின் மின்துறையிலேயே வடமாநிலத்தவர்களை வேலையில் அமர்த்த வழிவகுத்தனர். இந்த அரசு திரும்ப வரக்கூடாது என்பது நம் நிலைப்பாடாக இருக்கவேண்டும். அப்படியெனில் யார் ஜெயிப்பார்கள் என்று பார்க்க வேண்டும். சிறிய கட்சிகளால் தனிப்பட்ட முறையில் ஜெயிக்க முடியாது. திமுக கூட்டணி தான் இடதுசாரி சக்திகளை உள்ளடக்கி உள்ளது. சமூக நிதிக்காகவும், பாட்டாளி மக்கள் நலனுக்காக உழைக்க கூடிய முக்கிய கட்சிகளை கூட்டணியாக கொண்டு வந்துள்ளது. சமூக நீதி அடிப்படை என்று வரும்போது பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் தான். இதன் அடிப்படையில் அமைந்துள்ள அணியை தான் ஆதரிப்பது சரியான முடிவாக இருக்கும். திமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்பதே இவர்களுக்கு கொடுத்த அசைன்மென்டாக இருக்கும் என்று கூறுகிறீர்களா?

நிச்சயம். அப்படித்தான் அவர்கள் செய்கின்றனர். ஆர்எஸ்எஸ் சொல்லியது போன்று திட்டமிட்டு செய்கிறார்கள். மறுபுறம் ஆர்எஸ்எஸ் என்ன நினைக்கிறதோ அதை தாங்களே செய்கின்றனர் என்கிற ஐயப்பாடு இருக்கிறது. ஏதோ ஒரு வியூகம் வகுப்பதில் அவர்கள் உள்ளடங்குகின்றனர் என்பதை பார்க்க முடிகிறது. உதாரணமாக அரவக்குறிச்சி தொகுதியில் இஸ்லாமிய வேட்பாளர்களை இவர்கள் நிறுத்தியுள்ளனர். நாம் தமிழர் கட்சியோ, மற்ற கட்சியோ ஏன் பெரும்பான்மை சமூக மக்களை நிறுத்தக்கூடாது. காரணம், அந்த தொகுதியில் பாஜ வேட்பாளர்களுக்கு உதவுவதற்காக, திமுகவுக்கு இஸ்லாமியர்களின் ஓட்டுக்கள் விழக்கூடாது என்பதற்காக தான், ஒன்று சேராமல் தடுப்பதற்காக தான் நிறுத்தியுள்ளனர் என்று எண்ணத்தோன்றுகிறது.

மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சியை பாஜவின் பி டீம் என சமூக ஆர்வலர்கள், அரசியல் சார்பற்ற இயக்கங்கள் கூறி வருகின்றன. ஆனால், மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தியதாக கருதுகிறீர்களா?ஆர்எஸ்எஸ் படையெடுப்பை தடுத்து நிறுத்த கூடிய ஆற்றல் திமுகவுக்கு இருக்கிறது. அதை எல்லாம் பலவீனப்படுத்த வேண்டும். இளைஞர்கள் மத்தியில் தவறான கருத்தை பரப்ப வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு செய்கின்றனர். இதில், அவர்களுக்கு ஓரளவு வெற்றி கிடைத்து விட்டதாக நான் நினைக்கிறேன்.திராவிட கட்சிகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று பாஜ கூறி வந்ததே?  இதே திராவிட கட்சியுடன் இப்போது கூட்டணி வைத்திருக்கிறதே?பாஜ எப்போதும் பிறரின் முதுகில் பயணம் செய்து விட்டு, பின்னர் அவர்களை காலி செய்து விட்டு அந்த இடத்தில் நிற்பதே அவர்களின் யுக்தியாக உள்ளது. இப்போது அதிமுக நெருக்கமாக இருப்பதே அவர்களை பலவீனப்படுத்த தான். பாஜ நினைத்திருந்தால், அதிமுகவில் சசிகலா இணைத்திருக்க முடியும். ஆனால், சசிகலா தலைமையில் கட்சியை வலுப்படுத்த முடியும்.

ஆனால், சசிகலாவை வலுப்படுத்தினால் நிச்சயமாக அதிமுக வலுவானதாக மாறி விடும். இப்போதைக்கு பாஜவுடன் அதிமுக சேர்ந்து இருப்பது தந்திரமான செயல். அடுத்த கட்டத்தில் அதிமுகவில் இருக்கிற பாதி பேரை தன் கட்சிக்குள் கொண்டு வர முடியுமா என்பது தான் அவர்கள் திட்டம். ஏற்கனவே பலரை அவர்கள் கட்சியில் கொண்டு வந்து விட்டனர். மத்தியில் அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறது. பணம் இருக்கிறது. அதிமுக சக்தியை தன்னுடைய சக்தியாக பாஜ மாற்றி வருகிறது. அவர்களின் யுக்தியில் இதுவும் ஒன்றாக உள்ளது. திராவிட கட்சியை அழிக்க முயலும் பாஜ திராவிட கட்சி உடன் கைகோர்த்து இருக்கிறதா?

பெரியார் இல்லாமல் தமிழகத்தில் அரசியல் எப்படி இயங்கும். தமிழக அரசியலில் 70 ஆண்டுகால மரபுணுவை செதுக்கியது பெரியார். குறிப்பிட்ட கட்சி வேண்டுமென்றால் பலவீனமாக்கப்படலாம். ஆனால், பெரியார், அம்பேத்கரை தவிர்த்து இங்கு அரசியல் செய்ய முடியாது. ஒவ்வொரு கட்சியும் அவர்கள் இயங்குவதற்கான உரிமை உள்ளது. நாம் விரும்பும்படி தான் அரசியல் செய்ய வேண்டும் என்று சொல்ல முடியாது. அவர்கள் நம் உத்தரவில் நடக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. ஆனால், அவர்கள் ஆர்எஸ்எஸ் விரும்புகிறபடி தான் நடக்கிறது. அப்படி என்றால் ஏதோ ஒரு வகையில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் வளர உறுதுணையாக அவர்கள் இருக்கின்றனர்.

அரவக்குறிச்சி தொகுதியில் பாஜ வேட்பாளர்களுக்கு உதவுவதற்காக, திமுகவுக்கு இஸ்லாமியர்களின் ஓட்டுக்கள் விழக்கூடாது என்பதற்காக தான், ஒன்று சேராமல் தடுக்க பல கட்சிகளை நிறுத்தியுள்ளனர்.

Related Stories:

>