×

சென்னையில் அதிகரிக்கும் தொற்று அரசு மருத்துவமனைகளில் கொரோனோ வார்டுகள் நிரம்பியது

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுகள் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்புவரை நாள் ஒன்றுக்கு சராசரியாக 150 பேர் கொரோனாவால் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 400க்கும் அதிகமானோர் ெதாற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். சென்னையில் கடந்த 15 நாட்களாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மிகவும் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தோர் கூட்டம் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி கொரோனா பிரத்யேக மருத்துவமனைகளான சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 350 படுக்கைகளில், தற்போது 306 கொரோனா நோயாளிகளும், கிண்டி கிங்ஸ் அரசு கொரோனா மருத்துவமனையில் 500 படுக்கைகளில் 490 கொரோனா நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதைப்போல் வெறிச்சோடி காணப்பட்ட ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை கொரோனா வார்டில் 273 நோயாளிகளும், ஸ்டான்லி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 90 நோயாளிகளும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 50 நோயாளிகளும் நேற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து பாதிக்கப்படுகிறவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகளை  சென்னை மாநகராட்சி ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அத்திப்பட்டு பகுதியில் 4 ஆயிரத்து 800 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் நிர்வாகத்தில் உள்ள அண்ணாநகர் அரசு புறநகர் மருத்துவமனையில் 100 படுக்கைகளும், கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 100 படுக்கைகளும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Tags : Coron ,Chennai , Increasing infection in Chennai In government hospitals Corono wards were packed
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...