மியான்மர் ராணுவ ஆட்சியால் கொன்று குவிக்கப்படும் மக்கள்: சிவில் உரிமை குழு தகவல்

யங்கூன்: தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் அரசு தலைவர் ஆங் சான் சூகி, முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலரை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, ஆட்சியை கவிழ்த்து மியான்மர் ராணுவம் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து அந்நாட்டு மக்கள் இராணுவ சர்வாதிகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆங் சான் சூகியை விடுவிக்க கோரியும் கடந்த 6 வாரங்களாக பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபடும் மக்களை எதிர்த்து மியான்மர் ராணுவம் தினமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இருப்பினும் மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உலக நாடுகளின் தலைவர்களும் மியான்மர் இராணுவத்தின் செயலுக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த 44 நாட்களில் குறைந்தது 235 பேர் ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக மியான்மரில் உள்ள சிவில் உரிமைகள் குழு தகவல் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 224-ஆக இருந்தது. வெள்ளிக்கிழமை மேலும் 11 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என சிவில் உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. மேலும் இராணுவ சதித்திட்டம் தொடர்பாக இதுவரை 2,330 பேர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டு அல்லது தண்டிக்கப்பட்டுள்ளனர் என சிவில் உரிமைகள் குழு கூறியுள்ளது. மியான்மர் ராணுவத்தின் முக்கிய 9 பொறுப்பாளர்கள் மீது பிரிட்டன் மற்றும் கனடா நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. கடந்த வாரம் மியான்மர் ராணுவ அதிகாரிகள் மீதும் அவர்கள் குடும்பத்தினர் மீது அமெரிக்க பொருளாதாரத் தடையை விதித்தது.

இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில், நாங்கள் எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து மியான்மர் மக்களுக்கு நீதி கிடைக்க ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்போம் என்று தெரிவித்தது. முன்னதாக ராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்து கொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மியான்மர் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்தது.

Related Stories:

>