×

பாஜகவின் பாதம் தாங்கியாக முதல்வர் பழனிசாமி செயல்படுகிறார்; கிளைக் கழகமாக அதிமுக செயல்படுகிறது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அண்ணா சிலை முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார். திமுக வேட்பாளர்கள் மனோ தங்கராஜ்,ஆஸ்டின், சுரேஷ்ராஜன் ஆகியோரை ஆதரித்து மற்றும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜய் வசந்த் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். கன்னியாகுமரியில் 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை அமைத்த கலைஞரின் மகன் வந்திருக்கிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்கினார். மேயர், எம்.எல்.ஏ. அமைச்சர், துணை முதல்வர் என படிப்படியாக வளர்ந்தவன் நான். 10 வருட ஆட்சியில் இருந்த அதிமுக அரசு என்ன செய்துள்ளது என மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

முதல்வர் பழனிசாமி ஆட்சியில் மக்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் டெண்டர் வழங்கப்பட்டவருக்கும், முதல்வருக்கும் உள்ள உறவை சொல்ல முடியுமா. மேலும் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தியின் சம்பந்திக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. மற்றும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணையை சந்திக்காமல் முதல்வர் தடை யாணை பெற்றுள்ளார். நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி என்ன பதில் அளிப்பர் என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஈரோட்டில் வருமான வரித்துறை பெருந்துறை சுப்பிரமணியம் வீட்டில் சோதனை செய்யப்பட்டது.

முதல்வரின் சம்பந்தி பெருந்துறை சுப்பிரமணியம், அவரின் சம்பந்தி ராமலிங்கம் ஆகியோர் அதிக டெண்டர் எடுத்துள்ளனர். டெண்டர் ஊழல் வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்வது உறுதியாகியுள்ளது. பாஜகவின் பாதம் தாங்கியாக முதல்வர் பழனிசாமி செயல்படுகிறார்; கிளைக் கழகமாக அதிமுக செயல்படுகிறது என்று ஸ்டாலின் விமர்ச்சித்துள்ளார். மேலும் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது இன்னும் விடை கிடைக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். ஜெயலலிதா எதிர்த்த மத்திய அரசின் திட்டங்களை அதிமுக அரசு ஆதரித்து அவருக்கு துரோகம் இழைத்து வருகிறது.

பாஜகவின் அடிமைகளாக இபிஎஸ், ஓபிஎஸ் செயல்பட்டு வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அரசு தற்போது சிறுபான்மையினருக்கு ஆதரவு என கூறிக்கொள்கிறது. மீனவர் சமுதாயத்தை கடல் சார் பழங்குடியின மக்களாக அறிவிக்க திமுக நடவடிக்கை எடுக்கும் மற்றும் மீனவர்களுக்கு மீன்பிடித் தடை காலத்திலும், மழைக்காதலத்திலும் வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும். கட்டுமர, நாட்டுப்படகு மீனவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் 400 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும். தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் சாலை பணியாளர்கள் நியமிக்கப்படுவர் மற்றும் திருக்கோயில் பணியாளர்களாக 25 ஆயிரம் பேர் நியமிக்கப்படுவர். தமிழகத்தில் 10 ஆண்டுகளாக மக்களை வஞ்சிக்கிற கொடுமைக்கார, ஆணவ ஆட்சியை அகற்றுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் சபதம் மேற்கொண்டார்.

Tags : Palanisami ,Pajaka ,Stalin , Chief Minister Palanisamy acts as the BJP's foothold; AIADMK acts as a branch: Criticism of DMK leader MK Stalin
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு