வெள்ளபுத்தூர் ஊராட்சியில் ஏரிகள் சீரமைக்காததால் விவசாயம் பாதிப்பு: விவசாயிகள் குற்றச்சாட்டு

மதுராந்தகம்: வெள்ளபுத்தூர் ஊராட்சியில் உள்ள 2 ஏரிகளை முறையாக சீரமைக்காததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வெள்ளபுத்தூர் ஊராட்சியில் வெள்ளபுத்தூர் கிராமம், வெள்ளபுத்தூர் காலனி, அம்பேத்கர் நகர், அருந்ததியர் பாளையம், குளக்கரை பகுதி, இருளர் பகுதி, ஆண்டிமேடு, கள்ளன்கொள்ளை, பாலக்காடு, இடையன்குளம் ஆகிய சிறுசிறு கிராமங்கள் உள்ளன. இங்கு, சுமார் 1,500 பேர் வசிக்கின்றனர். கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன.

இதில் நெல், கரும்பு ஆகியவை முக்கிய பயிர்களாக பயிரிடப்படுகின்றன. இந்த விவசாய நிலங்களுக்கு இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சித்தேரி, பெரியஏரி ஆகிய 2 விவசாய பாசன ஏரிகள் மூலமாகவே தண்ணீர் கிடைக்கிறது. இந்த 2 ஏரிகளும் மதுராந்தகம் பொதுப்பணித்துறையினர் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இந்த ஏரிகள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் தூர்வாரப்பட்டதாக அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த பணிகள் முறையாக நடக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தூர்ந்து இருக்கும் மண்ணை அல்லாமல், ஏரிக்கரைகளை மட்டுமே சீரமைத்து தூர்வாரியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இதன் காரணமாக ஏரியில் தேங்க வேண்டிய நீரின் கொள்ளளவு, மிகவும் குறைந்து விட்டது. லேசான மழை பொழிந்தாலே 2 ஏரிகளும் நிரம்பிய நிலையில் காணப்படுகிறது. 2 ஏரிகளை நம்பி தற்போது ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்ய முடிவதாக விவசாயிகள் புலம்புகின்றனர். எனவே, இனிவரும் காலங்களில் இந்த 2 ஏரிகளையும் முறையாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>