×

காஞ்சிபுரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்க நகரும் நடை மேம்பாலங்கள்: டிடிவி தினகரன் வாக்குறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்க நகரும் நடை மேம்பாலங்கள் அமைக்கப்படும் என தேர்தல் பிரசாரத்தின் போது, அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் வாக்குறுதி அளித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் போட்டியிடும்  வேட்பாளர்களை ஆதரித்து பெரும்புதூர், காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தீவிர பிரசாரம் செய்து  வாக்குகள் சேகரித்தார்.

காஞ்சிபுரம், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களான   மனோகரனன், ஆர்.வி.ரஞ்சித்குமாரை ஆதரித்து தேரடி பகுதியில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: காஞ்சிபுரம் நெசவாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் பட்டுப் பூங்கா நெசவாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப சீரமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். மேலும் கோயில் நகரம் என்பதால் தேரோட்ட காலங்களில் விழாக்கள் தடையின்றி நடைபெற, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மூங்கில் மண்டபம், தாலுகா அலுவலகம் மற்றும் பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் பாதையை கடந்து செல்வதற்கு, நகரும் நடை மேம்பாலங்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

இதில் மாவட்ட மகளிரணி வரலட்சுமி, மாணவரணி செயலாளர் பார்த்தசாரதி, ஒன்றிய செயலாளர் வேளியூர் தனசேகரன், கூரம் பச்சையப்பன், தம்மனூர் தாஸ், ஜெ.பேரவை செயலாளர் சதீஷ், நகர துணை செயலாளர் மதி, தகவல் தொழில்நுட்ப அணி சையத் அலி, தேமுதிக உத்திரமேரூர் தொகுதி பொறுப்பாளர்கள் அருண்குமார், லோகநாதன், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் ஏகாம்பரம், வாலாஜாபாத் பொன்னுரங்கம், தேவராஜ், காஞ்சிபுரம் நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kanchipuram ,DTV ,Dinakaran , Moving flyovers to ease traffic congestion in Kanchipuram: DTV Dinakaran promises
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...