×

சவுடு மண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்: பெரியபாளையம் அருகே பரபரப்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே ஏரியில் சவுடு மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் அருகே புன்னப்பாக்கம் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நெல், வேர்கடலை மற்றும் மல்லி, முல்லை, சாமந்தி போன்ற பூ வகைகளையும் விவசாயிகள் பயிர் செய்கின்றனர். இந்நிலையில், இந்த கிராமத்தில் 164 ஏக்கர் பரப்பில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் சவுடு மண் எடுப்பதற்காக குவாரி ஏலம் விடப்பட்டது. இதனால், நேற்று காலை  ஏரியில் மண் எடுப்பதற்காக 6 பொக்லைன் இயந்திரங்கள் ஏரியின் உள்ளே வந்தது.

இதையறிந்த, அப்பகுதி மக்கள் பொக்லைன் இயந்திரங்களை தடுத்து நிறுத்தி, “ஏன் ஏரியின் உள்ளே வந்தீர்கள்” என கேட்டனர். இதை கேட்ட அவர்கள், “இங்கு சவுடு மண் குவாரி விடப்பட்டுள்ளது. அதனால், மண் எடுக்க வந்தோம்” என்றனர்.
இதை கேட்ட கிராம மக்கள், “எங்கள் கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது இந்த ஏரி தான். அதில், நீங்கள் மண் எடுக்க கூடாது” என்றனர். அப்போது, அதையும் மீறி பொக்லைன் இயந்திரங்கள் மண் எடுக்க சென்றது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பொக்லைன் இயந்திரங்களை சிறைபிடித்து ஏரியிலிருந்து வெளியேற்றினர். மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, “குவாரி நிறுத்துவது குறித்து அனைவரும் பேசி முடிவு செய்து கொள்ளலாம்” என கூறினார். இதனை ஏற்று அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Bokline ,Periyapalayam , Villagers seize Bokline machines in protest against quarrying: Protest near Periyapalayam
× RELATED பெரியபாளையம் காவல் நிலையத்தில்...