திருவண்ணாமலையில் பாஜ வேட்பாளரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகள்: அய்யாக்கண்ணு உட்பட 19 பேர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட, நிர்வாணமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்ய முயன்ற விவசாயிகள் சங்கத்தினரை தடுத்து நிறுத்தி 19 பேரை போலீசார் கைது செய்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத பாஜ அரசை கண்டித்து, ேதசிய தென்னியந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், பாஜ போட்டியிடும் திருவண்ணாமலை, அரவக்குறிச்சி, தளி, திருவையாறு, திட்டக்குடி ஆகிய 5 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது என அதன் மாநில தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்திருந்தார். அதன்படி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் இருந்து ஆர்டிஓ அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.

அவர்களில் வேட்பாளர்களான சக்கரபாணி, ராஜேந்திரன் ஆகியோர் திடீரென தங்களுடைய ஆடைகளை அவிழ்த்துப் போட்டுவிட்டு நிர்வாண கோலத்தில் நடந்து வந்தனர்.  அதைத்தொடர்ந்து, போலீசார் நிர்வாண கோலத்தில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி வேட்டியை போர்த்தி நிர்வாணத்தை மறைத்தனர். அப்போது, தங்களை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, அய்யாக்கண்ணு உட்பட 19 பேரை கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.

Related Stories: