×

நாலா பக்கம்: புதுவை; கேரளா; மேற்கு வங்கம்; அசாம்

பாஜ.வின் புதிய நண்பர்கள் மம்தா திடீர் குற்றச்சாட்டு
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஒரு அணி, பாஜ ஒரு அணி, மார்க்சிஸ்ட் -காங்கிரஸ் கூ்டடணி ஒரு அணி என 3 அணிகள் மோதுகின்றன. ஆனால், முக்கிய போட்டி திரிணாமுல் - பாஜ இடையேதான் நிலவுகிறது. அடிதடி முதல் தனிநபர் தாக்குதல் வரையில், அனைத்திலும் இக்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. பிரசாரமோ... சொல்ல வேண்டாம். அடிபட்ட காலுடன், வீல்சேரில் அமர்ந்து மாநிலம் முழுவதும் வலம் வருகிறார் முதல்வர் மம்தா பானர்ஜி. மோடி, அமித்ஷா, ஜேபி.நட்டா, ராஜ்நாத் சிங், ஆதித்யநாத் போன்ற பாஜ நட்சத்திரங்களும் தேர்தல் களத்தில் சுழன்று வருகின்றனர். இதனால், மேற்கு வங்க தேர்தல் களத்தில் சூறாவளி வீசுகிறது. மம்தா தனது பிரசாரத்தில் பாஜ.வுக்கு மட்டுமின்றி , ‘மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் கூட பாஜ.வின் நண்பர்கள்தான். அதனால், அந்த கூட்டணிக்கும் ஓட்டு போடாதீர்கள்,’ என்று மக்களிடம் கூறி வருகிறார்.

ரகசியத்தை உடைத்த உம்மன் சாண்டி
தெற்கு கேரளாவில் சில தொகுதிகளை பாஜ.வுக்கு விட்டு கொடுக்கவும், அதற்கு கைமாறாக வேறு சில தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு வாக்களிக்க பாஜ.வும் ஏற்பாடு செய்துள்ளதாக, காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி குற்றம் சாட்டியுள்ளார். இந்த ரகசிய உடன்பாடு விவகாரம், ஆர்எஸ்எஸ். மூத்த தலைவர் மோகன்தாஸ் எழுதிய கட்டுரை மூலமாக அம்பலமாகி இருப்பதாக அவர் கூறினார். அந்த கட்டுரையில் காங்கிரஸ், முஸ்லிம், கிறிஸ்தவ கூட்டணியை வீழ்த்த கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் பாஜ.வுடன் கரம் கோர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருப்பதாகவும் உம்மன் சாண்டி தெரிவித்தார். இதன் மூலமாக, ரகசிய ஒப்பந்த அம்பலமாகி நடுத்தெருவுக்கு வந்து விட்டதடா என தலையில் அடித்து புலம்பி திரிகின்றனராம் பாஜ. தொண்டர்கள்.

யார் வந்தால் என்ன? பாக்கெட் நிரம்பும்
அசாமில் ஆளும் பாஜ, மக்களுக்கு சலுகைகளை அறிவிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. ‘நேரடி பலன் பரிமாற்றம்’ என்ற பெயரில் ஏற்கனவே பல்வேறு துறையினருக்கு பணம் வழங்கி வருகிறது இம்மாநில பாஜ அரசு. ஏற்கனவே வழங்கி வரும் நிதியுதவியின் அளவையும், உயர்த்தப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளது. மேலும், 40 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்க இருக்கிற தேயிலைத் தொழிலாளர்களுக்கு ரூ.5,000த்தை 2 தவணைகளில் வழங்கியுள்ளது. சமீபத்தில் மத்திய அரசின் சார்பிலும் 7.5 லட்சம் தேயிலைத் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த நேரடி பணப்பரிவர்த்தனை திட்டம் அசாம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதால், தற்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் இதே வழியில் ஆளுக்கொரு திட்டத்தை முன்வைத்து பிரசாரம் செய்து வருகின்றன. இதனால், யார் ஆட்சிக்கு வந்தாலும், ‘நமக்கு பணம் உண்டு’ என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் மக்கள்.

பெண் வேட்பாளர்களை நிறுத்தாத அதிமுக, பாஜ
புதுச்சேரி சட்டமன்றத்தில் 2001-க்குப் பின் பெண் எம்எல்ஏ.க்கள் இல்லாத நிலை இருந்தது. இந்த நிலை மாறி, கடந்த தேர்தலில் 4 பெண் எம்எல்ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காங்கிரஸ் சார்பில் நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட விஜயவேணி, திமுக சார்பில் காரைக்கால் நிரவி தொகுதியில் கீதா ஆனந்தன், என்ஆர்.காங்கிரஸ் சார்பில் திருபுவனை (தனி) தொகுதியில் கோபிகா, நெடுஞ்காடு (தனி) சந்திர பிரியங்கா ஆகிய 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஆனால், இம்முறை காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ் தவிர அதிமுக, பாஜ உள்ளிட்ட முக்கிய கட்சிகளில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. காங்கிரசில் ஒரே ஒரு பெண் வேட்பாளராக கடந்த முறை எம்எல்ஏவாக இருந்த விஜயவேணிக்கு மட்டுமே வாய்ப்பு தரப்பட்டுள்ளது. என்ஆர் காங்கிரசில் தற்போது எம்எல்ஏ.வாக உள்ள கோபிகா, சந்திர பிரியங்காவுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.


Tags : Nala ,Kerala ,West Bengal ,Assam , Nala Page: New; Kerala; West Bengal; Assam
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் செய்வதை...