குடிசையில் வாழ்க்கை; வறுமையிலும் நேர்மை: திருத்துறைப்பூண்டியை கலக்கும் இந்திய கம்யூ. வேட்பாளர்

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.மாரிமுத்து (49) போட்டியிடுகிறார். திருத்துறைப்பூண்டியில் இருந்து 15 கி.மீ. தூரமுள்ள கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த காடுவாகுடி கிராமம்தான் இவரது சொந்த ஊராகும். கடந்த கால்நூற்றாண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளரிலிருந்து கோட்டூர் ஒன்றிய இளைஞர் பெருமன்ற செயலாளராகவும், துணை செயலாளர், ஒன்றிய செயலாளர், விவசாய தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதியாக பொறுப்பு வகித்துள்ளார்.

 இவரது கூரை வீடு கஜாபுயலின் கோரத்தாக்குதலுக்குள்ளாகி சின்னாபின்னமான நிலையில், அந்த வீட்டிற்கு கீற்றை கூட மாற்றாமல் தார்ப்பாய் கொண்டு மேலே கட்டியுள்ளார். மழைநீர் ஒழுகாமல் உள்ள அந்த வீட்டில்தான் குடியிருந்து வருகிறார். இவருக்கு 66.2 செண்ட் நிலம் மட்டுமே சொந்தமாக உள்ளது. (அதுவும் இவரது அப்பாவின் சம்பாத்யம்.) இவரது மனைவி ஜெயசுதா, தாயார் தங்கம்மாள் ஆகியோர் விவசாய கூலியாட்களாக உள்ளனர். நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் மகள் ஜெயசுதா 10வதும், மகன் ஜெயவர்மன் 7வதும் படித்து வருகின்றனர். அரசியலிலும், வறுமையிலும் நேர்மை என்ற குறிக்கோளுடன் மிக எளிமையான வாழ்க்கை முறையை மாரிமுத்து கடைபிடித்து வருகிறார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களில் குறைந்த சொத்து மதிப்பு உள்ளவராக உள்ள மாரிமுத்து வங்கி கணக்கில் ரூ.58ஆயிரம், மனைவியிடம் ரூ.1,000, 3 பவுன் நகை மற்றும் கூரை வீடு, நிலம் ஆகியவற்றின் மொத்த சொத்து மதிப்பு ரூ.3 லட்சம்தான் என வேட்புமனுதாக்கலின் போது குறிப்பிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கோடிகளில் புரளும் வேட்பாளர்கள் இடையே குடிசை வீட்டில் வசிக்கும் வேட்பாளரான மாரிமுத்து தொகுதியில் வலம் வருகிறார்.

Related Stories:

>