சூடுபிடிக்கும் அசாம் சட்டமன்ற தேர்தல்!: காங். எம்.பி. ராகுல்காந்தியும், பிரியங்காவும் 4 நாள்கள் பரப்புரை..!!

டிஸ்பூர்: அசாம் சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும், அவரது தங்கை பிரியங்கா காந்தியும் 4 நாட்கள் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார்கள். முதல் இரண்டு நாட்கள் ராகுல் காந்தியும், அடுத்த 2 நாட்கள் பிரியங்கா காந்தியும் பரப்புரை செய்கின்றனர். அசாமில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதுவதால் அங்கு அதிக கவனம் செலுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. அசாம் மாநிலத்தை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்ற உத்வேகத்தில் காங்கிரசார் செயல்பட்டு வந்தனர்.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து யாரும் பிரச்சாரங்களுக்கு பெரிய அளவில் செல்லாத நிலை இருந்தது. காங்கிரசில் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோர் அதிக சக்தி வாய்ந்தவர்களாக அக்கட்சியால் பார்க்கக்கூடியவர்கள். இயல்பாகவே இவர்களின் கூட்டங்களுக்கு அதிகளவில் தொண்டர்கள், பொதுமக்கள் வருகை தருவதுண்டு. இதையடுத்து, அசாம் மாநிலத்திற்கு ராகுல்காந்தி கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி சென்றிருந்தார். அப்போது தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் என்பது அதிகரித்து தரப்படும் உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை அளித்திருந்தார். அவர் மீண்டும் எப்போது அசாம் வருவார் என கேள்வி எழுந்திருந்த நிலையில், இன்று காலை ராகுல் அசாம் சென்று, மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

பிறகு தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் அவர் உரையாடியுள்ளார். இன்று மாலை அரசியல் பொதுக்கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவிருக்கிறார். மாணவர்கள், தொழில்துறையினரை சந்தித்து பேசவுள்ள ராகுல், நாளை மறுநாள் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார். தொடர்ந்து 21ம் தேதி முதல் 2 நாட்கள் வரை பிரியங்கா காந்தி அசாம் மாநிலத்தில் முழுமையாக பிரச்சாரம் செய்கின்றார். 6 பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளார். அசாம் மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்கட்ட தேர்தல் மார்ச் இறுதி வாரத்தில் நடைபெறவிருக்கிறது. எனவே அடுத்தடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் மற்ற இடங்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

>