×

வருசநாடு கிராமத்தில் மூலவைகை ஆற்றில் தடுப்பணை சேதம்-சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

வருசநாடு :  வருசநாடு கிராமத்தில் மூலவைகை ஆற்றில் தடுப்பணை சேதமடைந்துள்ளதால், அதை சீரமைக்க விவசாயிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு கிராமத்தில் செல்லும் மூலவைகை ஆற்றின் குறுக்கே சில ஆண்டுகளுக்கு முன் புதிய தடுப்பணை கட்டப்பட்டது.

அதன்பின், வருசநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயத்துக்கு பயன்பட்டு வந்தது. இந்நிலையில், மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில், தடுப்பணை சிறிது, சிறிதாக சேதமடைய தொடங்கியது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தற்போது தடுப்பணை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதுதவிர தடுப்பணையில் இருபுறமும் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர்களும் சேதமடைந்துள்ளன. இதனால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.

இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், ‘மூல வைகையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால் தண்ணீர் தேங்குவதில்லை. இதனால், நிலத்தடி நீர் குறைந்து அக்கம்பக்கத்தில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால், விவசாயம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, வருசநாடு கிராமத்தில் தடுப்பணையை சீரமைக்க வேண்டும்’ என்றனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பரிந்துரை செய்துள்ளோம். நிதி வந்தவுடன் புதிய தடுப்பணை கட்டும் பணி நடைபெறும்’ என தெரிவித்தனர்.

Tags : Moolavaigai river ,Varusanadu , Varusanadu: Farmers have to take action to repair the dam on the Moolavaigai river in Varusanadu village.
× RELATED வருசநாடு சுற்றுவட்டாரத்தில் கனமழையால் மலைசாலைகள் கடும் பாதிப்பு