கலைஞர் மீது அவதூறு பரப்புகிறார் ; காவிரியை அடமானம் வைத்த துரோகி எடப்பாடி பழனிசாமி : மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

தஞ்சை : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பிரசார பொதுக் கூட்டத்தில், தஞ்சை மாவட்ட திமுக வேட்பாளர்கள் தஞ்சை  நீலமேகம், ஒரத்தநாடு எம்.ராமச்சந்திரன், பட்டுக்கோட்டை அண்ணாதுரை, பேராவூரணி  அசோக்குமார், திருவையாறு துரை.சந்திரசேகரன், கும்பகோணம் அன்பழகன், திருவிடைமருதூர் கோவி.செழியன் மற்றும் பாபநாசத்தில் கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜிவாஹிருல்லா ஆகியோரை ஆதரித்து  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  பேசியதாவது:

தஞ்சை கோட்டையில் கலைஞரின் கால் படாத இடமே இல்லை. காவிரி பிரச்னைக்காக 50 ஆண்டுகாலம் போராடி உரிமை காப்பாற்றியவர் கலைஞர். கலைஞரை பார்த்து காவிரி பிரச்னைக்கு துரோகம் இழைத்தவர் என எடப்பாடி பேசுகிறார். முதல்வர் பழனிசாமிக்கு நாக்கு அழுகி போய்விடும். யாரை பற்றி யார் சொல்வது.

காவிரி உரிமையை மீட்டு கொடுத்தவர் கலைஞர். காவிரி உரிமையை அடமானம் வைத்த துரோகி எடப்பாடி பழனிசாமி. அவரு கலைஞரை பார்த்து துரோகம் செய்ததாக கூறுவது பெரிய கொடுமை. ஒரு விவசாயி என்றால் ஸ்டாலினுக்கு பிடிக்காது என முதல்வர் கூறுகிறார். விவசாயி என்றால் பிடிக்கும். போலி விவசாயி என்றால் பிடிக்காது. பச்சை துண்டு போட்ட போலி விவசாயி என்றால் பிடிக்காது.  உண்மையான விவசாயி என்றால்  வேளாண் சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்திருக்க வேண்டுமு். டெல்லியில் விவசாயிகள் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இன்றும் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால் எடப்பாடி போராடும் விவசாயிகளை இடைதரகர்கள் என்று கொச்சைபடுத்தி பேசுகிறார். கொள்ளையடிப்பவர் விவசாயியா?  கொள்முதல் நிலையத்தில் ஊழல் நடந்து வருகிறது. இதை கண்டுகொள்ளாத நீங்கள் விவசாயியா? புயலால் பாதிக்கப்பட்டும் விவசாயிகளுக்கு இழப்பீடு தராதவர் விவசாயியா இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

தற்போது கொரோனா 2வது அலை வீசுவதாக செய்திகள் வருகிறது. உங்களையெல்லாம் தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன், கட்டாயம் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். இது மாதிரி கூட்டங்களுக்கு வரும்போது கட்டாயம் மாஸ்க் அணிந்து வாருங்கள். உங்களிடம் ஒரு அண்ணனாக, தம்பியாக கேட்டுக்கொள்கிறேன், மாஸ்க் அணிந்து வாருங்கள்.இந்த அடிமை ஆட்சிக்கு முடிவு கட்டவும், நமது சுயமரியாதையை காக்கவும் திமுக வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டுமாய் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories:

>