×

இந்தியா தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காது என உத்திரவாதம்!: இலங்கை வெளியுறவுத்துறை செயலாளரின் விளக்கத்தால் அதிர்ச்சி..!!

ஜெனிவா: ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தின் போது இந்தியா தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காது என உத்திரவாதம் அளித்திருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் இன படுகொலைக்கு முன்பாக ஐ.நா. அமைத்த மூவர் குழு அறிக்கை அளித்து 10 ஆண்டுகளாகியும் இலங்கை அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடர் ஜெனிவா நகரில் நடைபெற்று வருகின்றது.

இந்த கூட்டத்தில் இன படுகொலை குற்றங்களை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் வகையில் மனித உரிமைகள் மன்றம் தீர்மானம் நிறைவேற்றவுள்ளது. அப்போது தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழ் உணர்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியா தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காது என உத்திரவாதம் அளித்திருப்பதாக இலங்கை வெளியுறவுத்துறை செயலர் ஜெயநாத் கொலம்பகே கூறியுள்ளார். இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையில் இந்தியா நடந்துகொள்வதாக உறுதி அளித்திருப்பதாகவும் கொலம்பகே தெரிவித்தார்.

ஈழ தமிழர்களுக்கு எதிரான போர் குற்ற விசாரணை மீதான வாக்கெடுப்பு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் நடைபெறும் போது ஈழ தமிழர் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஆதரித்தும், இலங்கையில் வாழும் ஈழ தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்தியா வாக்களிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இதேபோல் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், தமிழ் உணர்வாளர்கள் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா முடிவெடுத்துள்ளதாக வெளியான தகவலால் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : India ,Sri Lankan Foreign Secretary , India, Position, Guarantee, Foreign Secretary of Sri Lanka
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!