பெண் எஸ்.பி.யின் பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் : விரைவில் கைது செய்யப்படுவார் என தகவல்!!

சென்னை : பெண் எஸ்.பி.யின் பாலியல் புகாருக்கு ஆளான சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் பெரம்பலூரில் முதலமைச்சர் பழனிச்சாமியின் தேர்தல் பரப்புரை பாதுகாப்பு பணிக்கு  சென்றுவிட்டு திரும்பிய போது, பெண் எஸ்பியிடம் சிறப்பு டிஜிபி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்பது புகார் ஆகும். இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.இது குறித்து கூடுதல் தலைமை செயலாளர் தலைமையிலான 6 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. அத்துடன் சிபிசிஐடி போலீசாரும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் புகார் அளிக்கக் சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்த புகாரில் மாவட்ட எஸ்.பி. மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளான சிறப்பு டிஜிபி இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்படாதது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டது. தற்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். எனினும் அவர் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறும் என சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories:

>