×

பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம்: சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசை இந்திய தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.  முதல்வரின் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில், ஐபிஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி.,யான கே.ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு  தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கையும் விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கை நியாயமாக விசாரித்து தீர்த்து வைக்க வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது. பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.  சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்படாதது ஏன், அவர் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம் காட்டப்படுகிறது. அவர் சக்தி வாய்ந்தவர் என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டப்படுகிறதா? இந்த வழக்கில் மக்கள் நீதிமன்றம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

எனவே, வழக்கை நேர்மையாக நடத்த வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது. 10க்கும் மேற்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிகள், சட்டம் ஒழுங்கு டிஜிபியை சந்தித்து, சிறப்பு டிஜிபியை ராஜினாமா செய்யக்கோரி கடிதம் கொடுத்துள்ளனர். இருந்தும் அவர் மீது நடவடிக்கைகள் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, சிறப்பு டிஜிபி மீதான விசாரணை அறிக்கையை மார்ச் 16ல்  சிபிசிஐடி தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.
இந்நிலையில் மார்ச் 16ம் தேதி சிபிசிஐடி சார்பில் சீலிட்ட கவரில் விசாரணை அறிக்கை சென்னை ஐகோர்ட்டில்  தாக்கல் செய்யப்பட்டது. அதில் சிபிசிஐடி நடத்திய விசாரணையில் சிறப்பு டிஜிபி மீதான புகாரில் முகாந்திரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் விசாரணையின்போது அவரை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை  கேள்வி எழுப்பி இருந்தது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் இது குறித்த அறிக்கை தமிழக தேர்தல் அதிகாரி மூலம் அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவுபடி சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டடார். முன்னதாக இந்த வழக்கில் பெண் எஸ்பியிடம் கார் சாவி பிடுங்கியதாக எஸ்.பி.கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் ராஜேஷ்தாஸ் சிறப்பு டிஜிபி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவரிடம் எஸ்பி முத்தரசி தலைமையிலான சிபிசிஐடி துறையினர் பல மணிநேரம் விசாரணை நடந்தது. அந்த அறிக்கையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Special DjiP Rajeshtas , Sexual harassment of female SP: Special DGP Rajesh Das suspended: Election Commission orders action
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...