அதிமுக அணியை வேரோடு வீழ்த்திட திமுக மகத்தான வெற்றி பெற பிரசாரம்: விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. மாநில தலைவர் பொன்குமார் தலைமை வகித்தார். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றிட வேண்டும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  முதல்வராக பொறுப்பேற்றிட வேண்டும். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு சாதகமான எந்த பணியும் நடந்ததாக தெரியவில்லை. குறிப்பாக கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய பணிகள் அடியோடு முடங்கி உள்ளன.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர், மாநிலங்களின் உரிமைகளை முழுமையாக பறிப்பதிலும், மொழி திணிப்பை தீவிரப்படுத்துவதிலும், தமிழ் கலாச்சாரத்தை அழிப்பதிலும் உறுதியாக இருந்து முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிக்கிறது. விவசாயிகள் வேதனையின் உச்சத்தில் இருக்கின்றனர். இப்படி எல்லாதரப்பு மக்களும் அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.  பொருளாதார வளர்ச்சி பாதையில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம் இப்பொழுது கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. எனவே அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். 10 ஆண்டுகால பாழ்பட்ட தமிழகத்தை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கை ஒரு நிதி நிலை அறிக்கை போல் உள்ளது. எனவே தமிழகத்தின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டும்; தொழிலாளர்கள், விவசாயிகள் குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியப் பணிகளை செம்மைப்படுத்திடவும் திமுக அரசு, மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைவது அத்தியாவசிய ஒன்றாகும். எனவே இந்த தேர்தலில் மதவாத சக்தியோடு கூட்டணி வைத்துள்ள அதிமுக அணியை வேரோடு வீழ்த்திடவும் திமுக மகத்தான வெற்றி பெற்றிடவும் விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிப்பார்கள். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>