×

அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக பல இடங்களில் அதிருப்தியாளர்கள் போட்டி: தலைவர்கள் கலக்கம்; வேட்புமனு தாக்கல் இன்று முடிகிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. நேற்று ஒரே நாளில் சுமார் 1,277 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர். 234 தொகுதிகளில் நேற்று வரை 3,342 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து பல தொகுதிகளிலும் சொந்த கட்சியினரே போட்டி வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளது, அக்கட்சிகளின் தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சியினரும் தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளனர்.

அரசியல் கட்சிகள் தங்களது தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு முடிந்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதிமுக 6 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமைக் கட்சி 1, அகில இந்திய பார்வர்டு பிளாக் 1, ஆதித்தமிழர் பேரவை 1, மக்கள் விடுதலைக் கட்சி ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. மொத்தத்தில் உதயசூரியன் சின்னத்தில் 188 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

அதிமுக கூட்டணியில் அதிமுக 177, பாமக 23, பாஜ 20, தமாகா 6 மற்றும் கூட்டணி கட்சிகள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிடுகின்றனர். இதேபோல் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் களத்தில் குதித்துள்ளன. கட்சியின் தலைவர்கள் வீதிவீதியாக சென்று சுழன்றடித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால், தமிழக தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி (வெள்ளி) தொடங்கியது. முதல் நாளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் 13 மற்றும் 14ம் தேதிகளில் வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை. இதனால் 15ம் தேதி (திங்கள்) வேட்புமனு தாக்கல் விறுவிறுப்படைந்தது. அன்றைய தினம் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோவில்பட்டியில் அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், திருவொற்றியூர் ெதாகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், விஐபிக்கள் அடுத்தடுத்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.

16ம் தேதி செவ்வாய்க்கிழமை என்பதால், வேட்புமனு தாக்கல் செய்ய கட்சியினர் ஆர்வம் காட்டவில்லை. நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் சூடுபிடித்தது. தொடர்ந்து நேற்றும் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்படைந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 1,277 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று வரை 5 நாட்களில் தமிழகத்தில் உள்ள 234 ெதாகுதிகளிலும் 2,765 ஆண்கள், 576 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 3,342 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல் செய்வது இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணியுடன் முடிகிறது. இன்று கடைசி நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக இருக்கும் என்று தெரிகிறது. நாளை (20ம் தேதி) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. 22ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த முறை தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மநீம கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என ஐந்துமுனை போட்டி நிலவுகிறது. வேட்பு மனு தாக்கல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனல் பறக்கும் பிரசாரமும் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் சீட் கிடைக்காத அதிருப்தியில் பல தலைவர்கள் போட்டி வேட்பாளர்களாக களத்தில் குதித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தற்போதைய எம்எல்ஏ விஜயகுமாருக்கு சீட் கொடுக்காமல், பாமகவுக்கு ஒதுக்கியதால் அவரது ஆதரவாளர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டங்களை நடத்தினர். அதை தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் லட்சுமி சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியில் சிட்டிங் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரனுக்கு சீட் கொடுக்காமல், சந்திரனுக்கு சீட் கொடுத்தனர்.

இதனால் சந்திரசேகரன் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதேபோல, குமாரபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் தங்கமணியை எதிர்த்து போட்டியிட பாஜ மாவட்ட தலைவர் ஓம் சரவணா நேற்று மனுதாக்கல் செய்துள்ளார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை எதிர்த்து, அதே கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலம் சுயேச்சையாக போட்டியிடுகிறார். தூத்துக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணியான தமாகா வேட்பாளர் எஸ்டிஆர்.விஜயசீலனை எதிர்த்து தூத்துக்குடி மேற்கு மண்டல பாஜ முன்னாள் தலைவர் ராஜவேலு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் நெவளிநாதன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். திருமயம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வைரமுத்துவை எதிர்த்து முன்னாள் ஒன்றிய சேர்மன் அழகு சுப்பையா சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதை தவிர ராமநாதபுரம், நெல்லை, சிவகங்கை மாவட்டங்களில் கடும் அதிருப்தி நிலவுவதால் கட்சிக்காரர்களை தவிர வேறு சில சமூக ஆர்வலர்களை சுயேச்சைகளாக களம் இறக்கியுள்ளனர். இவ்வாறு தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக அக்கூட்டணி கட்சியினரே களத்தில் குதித்துள்ளது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. இதனால், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் நேற்று வரை 5 நாட்களில் 2,765 ஆண்கள், 576 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 3,342 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
* கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
* வேட்புமனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிகிறது. நாளை வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. 22ம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள்.

Tags : AIADMK rivals contest against AIADMK candidates in several places: Leaders riot; Candidature filing ends today
× RELATED மீண்டும் வாக்குச் சீட்டு முறை...