×

சாலை வியாபாரிகள் பாதுகாப்பு சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுகிறதா? தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை:தமிழகத்தில் சாலை வியாபாரிகளின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்காக கடந்த 2014ம் ஆண்டு ‘சாலை வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்துதல்’ சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல், இடத்திற்கான உரிமம் வழங்குதல், சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாத்தல், வியாபாரிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து முறையிட ஓய்வு பெற்ற நீதித்துறை அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்தல், காப்பீடு திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த சட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி சாலை வியாபாரிகள் குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் சிங்காரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படாததால் சாலை வியாபாரிகள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் வரை சாலை கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தவோ வியாபாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தவோ கூடாது என உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் சாலை வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டத்தை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 2  வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.


Tags : Government of Tamil Nadu Answer Court , Is the Road Traders Safety Act fully enforced? Government of Tamil Nadu Answer Court order
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...