×

ரேடியோ, பொதிகை டிவியில் பிரசாரம் அரசியல் கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கீடு

சென்னை: அகில இந்திய சென்னை வானொலி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி அகில இந்திய வானொலியிலும், பொதிகை தொலைக்காட்சியிலும் அரசியல் கட்சிகளின் தேர்தல் ஒலிபரப்பிற்கு நேர ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் நேற்று முன் தினம் (17ம் தேதி) மாலை 4:30 மணிக்கு சென்னை தொலைக்காட்சியில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முன்னிலையில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகளின் பிரநிதிகளும் சென்னை வானொலியின் நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவர் பிரபஞ்சம் பாலசந்திரன், பொதிகை தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பிரிவுத்தலைவர் சையத் ரபீக் பாஷா உசைனி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021க்கான அரசியல் கட்சிகளின் தேர்தல் ஒலிபரப்பிற்கு அகில இந்திய வானொலியில் 1980 நிமிடங்களும், பொதிகை தொலைக்காட்சியில் 1980 நிமிடங்களும் தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. கோவிட்-19 நோய் தொற்றினைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகளுக்கான பிரசார நேரத்தை இருமடங்காக்கி இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அகில இந்திய வானொலியில் தேர்தல் ஒலிபரப்பு இம்மாதம் 25ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாள்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.25 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 10.10 மணி வரையிலும் ஒலிபரப்பாகும். தேர்தல் ஒலிபரப்பினை அகில இந்திய வானொலியின் முதல் அலைவரிசைகள், கோடைப் பண்பலை உட்பட எஃப்எம் ரெயின்போ அலைவரிசைகள் ஆகியவற்றில் நேயர்கள் கேட்கலாம். அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஒலிபரப்பு நிமிடங்கள் வருமாறு: அதிமுக- 560 நிமிடங்கள், திமுக-455 நிமிடங்கள், இந்திய தேசிய காங்கிரஸ்- 164 நிமிடங்கள், பாஜ- 123 நிமிடங்கள், தேமுதிக- 118 நிமிடங்கள், இந்திய கம்யூனிஸ்ட்- 99 நிமிடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 98 நிமிடங்கள், பகுஜன் சமாஜ்- 93 நிமிடங்கள், இந்திய திரிணாமுல் காங்கிரஸ்- 90 நிமிடங்கள், தேசியவாத காங்கிரஸ்- 90 நிமிடங்கள், தேசிய மக்கள் கட்சி- 90 நிமிடங்கள் என ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags : Allotment of time for campaigning political parties on radio, package TV
× RELATED சொல்லிட்டாங்க…