கலை, அறிவியல் உள்ளிட்ட உயர் கல்வி படிப்புகளுக்கும் திறனறிவு தேர்வு நடத்தப்படும்: ஏஐசிடிஇ தலைவர் தகவல்

சென்னை: இந்திய கல்வி மேம்பாட்டுக்கான கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இணைந்து பொறியியல் மேலாண்மை படிப்புகளுக்கான கல்வியாளர்கள், துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் கருத்தரங்கம் எழும்பூரில் நேற்று நடந்தது. இதில் அகில இந்திய தொழில்நுட்ப  கல்வி இயக்கக (ஏஐசிடிஇ) தலைவர் அனில் தத்ராயா சஹஸ்ர புத்தே, விஐடி பல்கலைக்கழக துணை தலைவர் செல்வம், பொறியியல் கல்லூரி தாளாளர் மலர்விழி, சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன், கல்வியாளர் உமாதேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தொழில்நுட்ப கல்வியை மீட்டமைப்பதற்கும் தேசிய கல்வி கொள்கை 2020 செயல்படுத்துவதற்கும்  ஒப்புதல் செயல்முறை கையேடு 2021-22 முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதேபோல், 2020 தேசிய கல்வி கொள்கையில் சிறந்து விளங்கும் பல தரப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்விக்கான வங்கி, ஆசிரியர் கல்வி, வெளிநாட்டு ஒத்துழைப்புஉள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கிற்கு பின்னர் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தலைவர் அனில் தத்ராயா சஹஸ்ர புத்தே நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய புதிய கல்விக்கொள்கை 12ம் வகுப்பில் வேதியியல், கணிதம் படிக்காதவர்களும் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர ஊக்குவிப்பதாகவும், அந்த வகையில் தொழிற்கல்வி மாணவர்களும் பொறியியல் படிப்பில் சேரலாம். பொறியியல் படிப்பில் சேர கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்கள் கட்டாயமில்லை என்று வெளியான தகவல் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. தொழிற்கல்வி மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருகிறபோது அவர்கள் முதலாம் ஆண்டில் பொறியியல் படிப்பிற்கு அடிப்படையாக விளங்குகிற கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களை கட்டாயம் படித்து தேர்ச்சி அடைய வேண்டும். மேலும் அனைத்து வகை உயர்கல்வி படிப்புகளிலும் மாணவர்கள் சேருகிறபோது அவர்களின் திறனை அறியும் வகையில் நுழைவுத் தேர்வு அடிப்படையிலான ஒரு திறனறிவுத் தேர்வு நடத்தப்பட்டு அந்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

Related Stories: