×

கர்ணன் பட பாடல் வரிகளை நீக்க வழக்கு : தயாரிப்பாளர், இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: கர்ணன் பட பாடல் வரிகளை நீக்கக் கோரிய வழக்கில் தயாரிப்பாளர், இயக்குநர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த பிரபு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் ஹீரோவாக நடிக்கும் ‘‘கர்ணன்’’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதிலுள்ள ஒரு பாடல் வரி, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை தாழ்வாகவும், தவறாகவும் குறிப்பிடும் வகையில் உள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.  பண்டாரம், ஆண்டிப்பண்டாரம், ஜங்கம், யோகீஸ்வரர் சமுதாயத்தினரின் உணர்வுகளையும், நன்மதிப்பையும் கெடுக்கும் வகையில் உள்ளது.

குறிப்பிட்ட சமுதாய பெண்களை இழிவுப்படுத்தி, நன்மதிப்பை கெடுக்கும் வகையில் உள்ளது. எனவே, ‘‘கர்ணன்’’ திரைப்பட பாடலில் உள்ள சர்ச்சைக்குரிய வரிகளை நீக்கிய பிறகே படத்தை வெளியிட வேண்டும். அதுவரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து அந்தப் பாடலை நீக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர், மனு குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.


Tags : Karnan , Karnan movie song, lyrics, remove case
× RELATED கம்பர் – இராமாவதாரம்