×

4வது டி20: இந்தியா அபார வெற்றி: சூரியகுமார் அதிரடி அரை சதம்

அகமதாபாத் : இங்கிலாந்து அணியுடனான 4வது டி20 போட்டியில், 8 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமநிலை ஏற்படுத்தியது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அந்த அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் யஜ்வேந்திர சாஹலுக்கு பதிலாக தீபக் சாஹர் இடம் பெற்றார். இஷான் கிஷன் காயம் அடைந்துள்ளதால், அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் சேர்க்கப்பட்டார். ரோகித், கே.எல்.ராகுல் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். ரோகித் 12 பந்தில் 12 ரன் எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த சூரியகுமார், தான் சந்தித்த முதல் பந்தையே அமர்க்களமாக சிக்சருக்குத் தூக்கி அசத்தினார். சூரியகுமார் துடிப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்த, பார்மை இழந்து தவித்து வரும் ராகுல் 14 ரன் எடுத்து (17 பந்து, 2 பவுண்டரி) ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆர்ச்சரிடம் பிடிபட்டார்.

கேப்டன் கோஹ்லி 5 பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில், ரஷித் சுழலில் இறங்கி வந்து சிக்சர் அடிக்க முயன்று விக்கெட் கீப்பர் பட்லரால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். இந்தியா 8.4 ஓவரில் 70 ரன்னுக்கு 3வது விக்கெட்டை இழந்தது. ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், அதிரடியை தொடர்ந்த சூரியகுமார் 28 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரை சதத்தை நிறைவு செய்தார். அவர் 57 ரன் (31 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சாம் கரன் பந்துவீச்சில் மாலனிடம் பிடிபட்டார். அடுத்து வந்த ரிஷப் பன்ட் 30 ரன் (23 பந்து, 4 பவுண்டரி), ஹர்திக் பாண்டியா 11 ரன், ஷ்ரேயாஸ் அய்யர் 37 ரன் (18 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். வாஷிங்டன் சுந்தர் 4 ரன் எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் ரஷித் வசம் பிடிபட்டார். இந்தியா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன் குவித்தது. ஷர்துல் தாகூர் (10 ரன்), புவனேஷ்வர் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவரில் 33 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். அடில் ரஷித், மார்க் வுட், பென் ஸ்டோக்ஸ், சாம் கரன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 186 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் இருவரும் துரத்தலை தொடங்கினர். புவனேஷ்வர் முதல் ஓவரில் ஒரு ரன் கூட தராமால் மெய்டனாக வீசி நம்பிக்கை அளித்தார். பட்லர் 9 ரன் எடுத்து புவனேஷ்வர் வேகத்தில் ராகுல் வசம் கேட்ச் கொடுத்து வெளியேற, இங்கிலாந்து 2.5 ஓவரில் 15 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்து ஜேசன் ராயுடன் டேவிட் மாலன் இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். மாலன் 14 ரன் எடுத்து சாஹர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ஜேசன் ராய் 40 ரன் (27 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஹர்திக் பந்துவீச்சில் சூரியகுமார் வசம் பிடிபட்டார்.

இங்கிலாந்து 8.5 ஓவரில் 66 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறிய நிலையில், பேர்ஸ்டோ - ஸ்டோக்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன் குவித்தது. இதனால் ஆட்டம் பரபரப்பானது. பேர்ஸ்டோ 25 ரன் (19 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஸ்டோக்ஸ் 46 ரன் (23 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் மோர்கன் 4, சாம் கரன் 3 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆட்டம் மீண்டும் இந்திய அணி பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் ஜார்டன் (12) வெளியேறினார். இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து தோற்றது. ஆர்ச்சர் 18, ரஷித் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ஷர்துல் 3, ஹர்திக், சாஹர் தலா 2, புவனேஷ்வர் 1 விக்கெட் வீழ்த்தினர். தொடரை வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை நடக்கிறது.


Tags : India ,Suriyakumar , 4th T20, India, win, Suriyakumar, half century
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...