×

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இன்சூரன்ஸ் துறையில் 74% நேரடி முதலீடுக்கு அனுமதி: மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது

புதுடெல்லி: காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை தொடர்ந்து 4 முறை ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘காப்பீட்டு திருத்த மசோதா 2021’ஐ நேற்று தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதத்தில் பல்வேறு கட்சி எம்பி.க்கள் பங்கேற்றனர். மாநிலங்களவை காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், `காப்பீட்டு சட்டம் 1938ல் இதுவரை 3 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. முதல் முறையாக, வாஜ்பாய் பிரதமராக இருந்த போது காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26%, 2வதாக 2015ம் ஆண்டில் 49%, 3வதாக தற்போது 74%  ஆக உயர்த்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். இந்த மசோதா நன்கு ஆராயப்பட வேண்டும். எனவே, இதனை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்,’’ என்றார்.

பாஜ எம்பி பூபேந்தர் யாதவ் பேசுகையில், ``எதிர்க்கட்சியினர் விதிகள் 71,72ன் கீழ் நிலைக்குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் நிறைவேற்றவில்லை. இந்த மசோதா மாநிலங்களவையின் நிலைக்குழு, சட்ட கமிஷன், நரசிம்மன் கமிஷன், தேர்வு குழு ஆகியவற்றினால் முழுமையாக பரிசீலிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2008ல் இதே போன்ற மசாதோ தாக்கல் செய்யப்பட்டது,’’ என்றார். அடுத்து பேசிய திமுக எம்பி.யான திருச்சி சிவா, ``இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தால், திருத்தங்களுக்காக நிலைக்குழுவுக்கு அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டிருக்கும். ஆனால், இப்போது மாநிலங்களவையில் நேரடியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும். முழுவதுமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்,’’ என்றார்.

இதைத் தொடர்ந்து, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பி.க்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால், மதியம் 2.40 முதல் மாலை 3.40 மணி வரை அடுத்தடுத்து 4 முறை அவை  ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், விவாதத்துக்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘நேரடி அந்நிய முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்துவதால், எந்த ஆபத்தும் ஏற்படாது. வெளிநாட்டு நிறுவனங்கள் உரிமையாளர்களாக இருக்குமே தவிர, அதன் முடிவு எடுக்கும் நிர்வாகத்தில் இந்தியர்களே இயக்குனர்களாக இருப்பார்கள். எனவே, இந்திய பணம் எதுவும் வெளிநாடு செல்லாது,’’ என்றார். பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலமாக மசோதா நிறைவேற்றப்பட்டது. அடுத்து, மக்களவையில் இது தாக்கல் செய்யப்பட உள்ளது.

ஏன் இவ்வளவு அவசரம்?

மக்களவையில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை குறித்து, எதிர்க்கட்சிகள் நேற்று பிரச்னை கிளப்பின. அப்போது, தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, ``உலகச் சந்தை  நிலவரத்துக்கு ஏற்ப பொதுத்துறை பங்குகளை விற்று தனியார் மயமாக்குவது தேவை என்ற போதிலும், தனியார் மயமாக்க மத்திய அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது? அதிலும், 8 அமைச்சகங்களின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று தனியார் மயமாக்க முடிவு எடுத்துள்ளது. நல்ல லாபம் ஈட்டும் எல்ஐசி.யின் பொதுத்துறை பங்குகளை விற்பது மிகவும் கவலையளிக்கிறது,’’ என்று கேட்டார். இதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர், `` எல்ஐசி தனியார் மயமாக்கப்படாது. அதற்கான பொதுபங்கு வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது,’’ என்றார்.

Tags : Bill , Opposition, strong opposition, insurance, statewide
× RELATED ராமேஸ்வரம் கோயில் உண்டியல் வழக்கு:...