ஜிபிஎஸ் மூலம் வாகனங்களிடம் கட்டணம் வசூல் நாடு முழுவதும் ஓராண்டில் சுங்கச்சாவடிகள் மூடப்படும்: நாடாளுமன்றத்தில் கட்கரி அறிவிப்பு

புதுடெல்லி: ‘இந்தியாவில் அடுத்த ஓராண்டில் சுங்கச்சாவடிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படும்,’ என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். நாடு முழுவதும் தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள் மூலம், வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் முறைகேடுகள், அடிக்கடி மோதல்கள், போக்குவரத்து நெரிசல், தாமதம் போன்றவை ஏற்படுகின்றன. சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் அதிக நேரம் நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கவும், சுலபமான முறையில் சுங்க கட்டணத்தை வசூலிக்கவும் தற்போது பாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம், இப்போது 93 சதவீத வாகனங்களிடம் வரி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், இந்த சுங்கச்சாவடிகளை ஆக்கிரமித்துள்ளனர்.

இது பற்றி கருத்து தெரிவித்த மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘சுங்கச்சாவடிகளே இல்லாத நாடாக இந்தியா விரைவில் மாறும்,’ என்று அறிவித்தார். இந்நிலையில், மக்களவையில் நேற்று கேட்கப்பட்ட கேள்விக்கு கட்கரி அளித்த பதிலில் கூறியதாவது: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் இருப்பதும், அங்கு கட்டணத்தை செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதும் அடுத்த ஓராண்டுக்குள் காணாமல் போகும்.  அதற்கு பதிலாக, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலமாக வாகனங்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். நாடு முழுவதும் உள்ள சுங்கக்சாவடிகள் அகற்றப்படும். வாகனங்களிடம் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கான ஜிபிஎஸ் தொழில்நுட்பம், ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்படும். இந்த முறையில், குறிப்பிட்ட சாலையில் வாகனங்கள் கடக்கும்போது, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலமாக வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு, அதன் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக கட்டணம் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பழையதை அழித்தால் எல்லாருக்கும் நன்மை

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 20 ஆண்டுகள் பழமையான வாகனங்களை அழிக்கும் திட்டத்தை பற்றி கட்கரி அளித்த விளக்கத்தில், ‘‘பழைய வாகனங்களை அழிக்கும் திட்டம், எல்லோருக்கும் நன்மை தருவதாகும். இந்தியாவில் 20 ஆண்டுகளை கடந்த 51 லட்சம் இலகுரக வாகனங்களும், 15 ஆண்டுகளை கடந்துள்ள 34 லட்சம் வணிக ரீதியான வாகனங்களும், 15 ஆண்டுகள் பழமையான 17 லட்ச கன ரக வாகனங்களும் இன்னும் உபயோகத்தில் உள்ளன. இந்த பழைய வாகனங்கள் 12 சதவீதம் வரை சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. இவற்றை அழிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் காக்கப்படுவதுடன், பொருளாதார ரீதியிலான வளர்ச்சியும் ஏற்படும். தற்போது, ₹4.5 லட்சம் கோடியாக உள்ள மோட்டார் வாகனத் துறையின் வருவாய், ₹ 10 லட்சம் கோடியாக உயரும். இதன்மூலம் எரிபொருள் திறன் உயரும், புதிய வாகனங்களின் விற்பனையால் ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்கும்,’’ என்றார்.

புதிய வாகனம் வாங்கினால் 5 சதவீதம் சலுகை

கட்கரி மேலும் கூறுகையில், ‘‘பழைய வாகனங்களை அழித்து விட்டு புதிய வாகனங்களை வாங்கும் உரிமையாளர்களுக்கு, புதிய வாகனத்தின் விலையில் ஐந்து சதவீதம் சலுகை அளிக்கப்படும். இதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்,’’ என்றார்.

Related Stories:

>