×

அமெரிக்க தேர்தலில் தலையிட்டதால் ஆத்திரம் புடின் ஒரு கொலைகாரர் அதிபர் பைடன் ஆவேசம்: தூதரை வாபஸ் பெற்று ரஷ்யா பதிலடி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு செய்து தொடர்பாக அதிபர் பைடனுக்கும், ரஷ்ய அதிபர் புடினுக்கும் பகிரங்க மோதல் வெடித்துள்ளது.  ‘புடின் ஒரு கொலைக்காரர். அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதற்கான விலையை விரைவில் அவர் கொடுப்பார்,’ என பைடன் எச்சரித்ததை தொடர்ந்து, அமெரிக்காவுக்கான தனது தூதரை புடின் வாபஸ் பெற்றுள்ளார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பரில் நடத்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவதற்கான உதவிகளை ரஷ்ய அதிபர் புடின் செய்ததாகவும், ஜோ பைடனை தோற்டிப்பதற்கான சதிச் செயல்களில் அவர் ஈடுபட்டதாகவும்,  அமெரிக்க உளவுத்துறை சில தினங்களுக்கு முன் குற்றம்சாட்டியது. இது தொடர்பான அறிக்கையையும் அதிபர் பைடனிடம் தாக்கல் செய்தது.  இதைத் தொடர்ந்து, பைடனுக்கும் புடினுக்கும் இடையே நேரடியாக பகிரங்க மோதல் வெடித்துள்ளது, இது பற்றி பைடன் கூறுகையில், ‘‘புடின் ஒரு கொலைக்காரர். தனது நாட்டு எதிர்க்கட்சி தலைவரையே அவர் விஷம் வைத்து கொலை செய்ய முயன்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் என்னை தோற்கடிப்பதற்கான சதிச் செயலில் ஈடுபட்டதற்கான விலையை விரைவில் அவர் கொடுப்பார்,’ என்றார். இதற்கு, புடினும் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார். பைடனின் இந்த குற்றச்சாட்டு வெளியான சிறிது நேரத்தில்,  அமெரிக்காவுக்கான தனது நாட்டு  தூதர் அனடோலி ஆன்டனோவை புடின் வாபஸ் பெற்றார். அவரை உடனடியாக ரஷ்யா திரும்பும்படியும் அவர் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், அமெரிக்காவில் நிலவும் சூழ்நிலை பற்றி ஆலோசனை செய்வதற்காகவே தூதர் அழைக்கப்பட்டார் என்று ரஷ்ய அரசு தெரிவித்தது. அதே நேரம், பைடன் தன்னை கொலைக்காரர் என்று கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Putin ,US ,President Biden , US election, Putin, assassin, President Biden
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...