×

தமாகா நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா..! ஜி.கே. வாசன் துரோகம் செய்துவிட்டார்: துணைத்தலைவர் கோவைதங்கம் கொதிப்பு

கோவை: ‘‘என் 52 ஆண்டு அரசியல் வாழ்க்கையில்,  கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் மாநில காங்கிரசில் இருந்தேன். ஜி.கே.வாசன்  எனக்கு துரோகம் செய்துவிட்டார். வால்பாறை தொகுதி எனக்கு கிடைக்காமல் போனதற்கு முக்கிய காரணம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான்,’’ என கோவை தங்கம் கூறினார். அதிமுக கூட்டணியில் விரும்பிய தொகுதி கிடைக்காததால் தமாகா துணைத்தலைவர் கோவை தங்கம் உள்பட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் தமாகா துணைத்தலைவர் கோவைதங்கம், வால்பாறை நிர்வாகிகள் மற்றும் மாநில செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, கோவைதங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது.

இதில், எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதைபோல் நாங்கள் சென்று அதிமுக கமிட்டியிடம் 12 சீட்கள் கேட்டோம். அவர்கள் பேசிவிட்டு, 6 தொகுதி தருவதாக தெரிவித்தனர். கமிட்டியில் இருந்த எஸ்.பி.வேலுமணி, இரட்டை இலை சின்னத்தில் என்னை நிற்க கூறினார். தாராபுரத்தில் போட்டியிட வலியுறுத்தினார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. பேச்சுவார்த்தை குறித்த விவரத்தை ஜி.கே.வாசனிடம் கூறினோம். அவர் தனியாக முதல்வரை சந்தித்து பேசினார். அப்போதும், 6 சீட் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, ஜி.கே.வாசனிடம், சுயேட்சையாக நிற்கலாம் என என்னோடு சேர்ந்து 11 பேர் வலியுறுத்தினோம்.

அதை எங்கள் தலைவர் ஏற்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு திருவிக.நகர் தொகுதியில் நிற்க கூறினார். அதற்கும் நான் ஒத்துக்கொள்ளவில்லை. வால்பாறையில்தான் நிற்க வேண்டும் என கூறினேன். என் 52 ஆண்டு அரசியல் வாழ்க்கையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் மாநில காங்கிரசில் இருந்தேன். ஜி.கே.வாசன் எனக்கு துரோகம் செய்துவிட்டார். இதனால், எனக்கு வால்பாறை தொகுதி கிடைக்கவில்லை. அவர் என்னை கைவிட்டுவிட்டார். இந்த தொகுதி எனக்கு கிடைக்காமல் போனதற்கு முக்கிய காரணம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான். நான் ஓட்டுக்கு காசு தரமாட்டேன். அப்படிப்பட்ட வெற்றி எனக்கு தேவையில்லை. இந்த நிமிடம் முதல் அந்த கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்து பதவியையும் ராஜினாமா செய்கிறேன்.

என்னுடன் சேர்ந்து இளைஞரணி மாநில துணைத்தலைவர் அருண்பிரகாஷ், மாநில செயலாளர்கள் பொன்.ஆனந்தகுமார், சி.ஏ.ராஜ்குமார், ராஜன் உள்பட மாவட்ட, மாநில செயலாளர்கள் என அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்கிறோம். வால்பாறை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக நான் போட்டியிடவில்லை. காசு கொடுக்காமல் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை கொடுத்தால் பார்க்கலாம். ேகாவை மாவட்டத்தில் பணம் கொடுத்துதான் கட்சிகள் வெற்றிபெற போகிறது. தேர்தல் ஆணையம், கலெக்டர் முதல் அனைத்து அதிகாரிகளையும் மாற்ற வேண்டும். அப்போதுதான் இங்கு தேர்தல் நேர்மையாக நடக்கும். வால்பாறை மக்களுக்காக நான் நிறைய செய்துள்ளேன். திமுக தலைவர் ஸ்டாலினும் அதற்கான திட்டங்களை வகுத்து கொடுத்தார். அதனால், அவர் அழைத்து பணி கொடுத்தால் அதை செய்வேன்.   இவ்வாறு கோவை தங்கம் கூறினார்.



Tags : Tamaka ,G. Q. Vasan , Tamaga executives resign ..! G.K. Vasan has betrayed: Vice-Chancellor Kovaithangam boil
× RELATED தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு...