×

அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்: டுவிட்டரில் #kickoutadmkbjp என்ற ஹாஷ்டேக் டிரெண்டிங்: தமிழகத்தில் 2-ம் இடம்.!!!

சென்னை: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், டுவிட்டரில் #kickoutadmkbjp என்ற ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. தேர்தலை சந்திக்க  அனைத்து கட்சியினரும் தீவிர களத்தில் இறங்கி உள்ளனர். அரசியல் கட்சிகள் தங்களது தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு முடிந்து சூறாவளி பிரசாரத்தில் இறங்கி உள்ளது.

திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதிமுக 6 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமைக் கட்சி 1, அகில  இந்திய பார்வர்டு பிளாக் 1, ஆதித்தமிழர் பேரவை 1, மக்கள் விடுதலைக் கட்சி ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

மொத்தத்தில் உதயசூரியன் சின்னத்தில் 188 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அதிமுக கூட்டணியில் அதிமுக 177, பாமக 23, பாஜ 20, தமாகா 6 மற்றும் கூட்டணி கட்சிகள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிடுகிறது.  இதேபோல் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் களத்தில் குதித்துள்ளன. இதனால், இந்த முறை தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மநீம கூட்டணி  மற்றும் நாம் தமிழர் கட்சி என ஐந்து முனை போட்டி நிலவுகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மநீம தலைவர் கமல் ஹாசன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,  கே.எஸ்.அழகிரி, வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தமிழக தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில், டுவிட்டரில் #kickoutadmkbjp என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தில் #kickoutadmkbjp என்ற ஹாஷ்டேக் டிரெண்டிங்கில் 2வது இடத்தில் உள்ளது. தலைநகர் சென்னையளவில் முதலிடத்தில் உள்ளது. #kickoutadmkbjp என்ற ஹாஷ்டேக் 6,711 ட்வீட்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, இந்தியாவை மத்திய அரசு அழிப்பது, நீட் தேர்வு மரணம், பாஜகவை ஜெயலலிதா விமர்சனம் செய்தது, குஷ்பு போட்டி, திராவிட நாடு,  அதிமுக தேர்தல் அறிக்கை, கிழிந்த ‘ஜீன்ஸ்’ சர்ச்சையில் சிக்கிய உத்தரகாண்ட் முதல்வர் உள்ளிட்ட சம்பவங்களை நினைவு படுத்தி டுவிட்டரில் இணையவாசிகள்  #kickoutadmkbjp என்ற ஹாஷ்டேக் பதிவிட்டு வருகின்றனர்.


Tags : TN ,Twitter , Heating hashtag #kickoutadmkbjp trending on Twitter: 2nd place in Tamil Nadu !!!
× RELATED ஏமாற்றுவதில் இது புது விதம்டா சாமி…...